
ஜார்க்கண்ட் மாநிலம், நாட்டின் முக்கிய நிலக்கரி உற்பத்தி மையமாக விளங்குகிறது. இங்கு பெருமளவில் நிலக்கரி வெட்டி எடுக்கப்பட்டு, பார்ககானா மற்றும் ஹசரிபாக் இடையே உள்ள அடர்ந்த வனப்பகுதியில் அமைந்துள்ள ரயில் பாதையில் நாடு முழுவதும் அனுப்பி வைக்கப்படுகிறது.
இப்பாதையில் பெரும்பாலும் சரக்கு ரயில்கள்தான் இயங்குகின்றன. இந்த தடத்தில் அடிக்கடி வனவிலங்குகள் தண்டவாளத்தை கடப்பது என்பது வழக்கம்.
இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு அதிகாலை 3 மணியளவில், ஒரு கர்ப்பிணி யானை பிரசவ வலியில் தண்டவாளத்தின் மத்தியில் படுத்துக்கொண்டது. யானையின் நிலைமை குறித்து வனத்துறை காவலர் ஒருவர் உடனடியாக வனத்துறை அதிகாரிகளுக்கும், பார்ககானா ரயில்வே கட்டுப்பாட்டு அறைக்கும் தகவல் தெரிவித்தார்.
இதனையடுத்து, அந்த வழியாக வரவிருந்த சரக்கு ரயில்கள் உடனடியாக நிறுத்தப்பட்டன. இரண்டு மணி நேரம் ரயில் இயக்கம் நிறுத்தப்பட்ட நிலையில், யானை சுகப்பிரசவம் செய்தது.
இது குறித்து ராம்கர் வனத்துறை அதிகாரி நிதிஷ் குமார் தெரிவித்ததாவது: “வனத்துறை காவலரிடமிருந்து தகவல் வந்ததும், உடனடியாக ரயில்வே அதிகாரிகளை தொடர்புகொண்டு ரயிலை நிறுத்த ஏற்பாடுகள் செய்தோம்.
பிறகு, தாய் யானையும், குட்டி யானையும் பத்திரமாக தண்டவாளத்திலிருந்து வனப்பகுதிக்குள் சென்றன. இது மனதை நெகிழவைக்கும் காட்சி. யானைகள் மனிதர்களுடன் நேரடியாக எதிர்கொள்ளும் சம்பவங்கள் இங்கு அடிக்கடி நடக்கின்றன. கடந்த 5 ஆண்டுகளில் மின்சாரம் தாக்குதல் உள்ளிட்ட காரணங்களால் 30 யானைகள் உயிரிழந்துள்ளன” என்றார்.
இந்த மனதை நெகிழவைக்கும் நிகழ்வின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. வனத்துறை, ரயில்வே அதிகாரிகளின் விழிப்புணர்வால் ஒரு உயிரின் பாதுகாப்பும், இயற்கையின் அரிய நிகழ்வும் பாதுகாக்கப்பட்டது என்பது இந்தச் சம்பவத்தின் முக்கிய சிறப்பு.