தமிழக அரசு ஒப்பந்த ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வுக்கு அனுமதி கொடுத்து அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த ஊதிய உயர்வு புதிதாக நியமிக்கப்படுபவர்களையும் சேர்த்து ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் வாரியம் கொடுத்த பரிந்துரையின் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது பழங்குடியினர் உண்டி உறைவிட பள்ளிகளில் உள்ள காலி பணியிடங்களை நிரப்புவதற்கு ஒப்பந்த அடிப்படையில் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். இதில் இடைநிலை ஆசிரியர்களுக்கு 8000 ரூபாயும், பட்டதாரி ஆசிரியர்களுக்கு 9,000 ரூபாயும், முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு 10,000 ரூபாயும் கடந்த 2017-ம் ஆண்டில் இருந்து வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் பழங்குடியினர் நலப்பிரிவின் கீழ் செயல்படும் பள்ளிகளில் ஒப்பந்த அடிப்படையில் செயல்படும் 221 ஆசிரியர்களும் புதிதாக ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட இருக்கும் 194 ஆசிரியர்களும் என மொத்தமாக 415 ஒப்பந்த ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு பழங்குடியினர் நலப்பிரிவு இயக்குனர் கடிதம் எழுதி அனுப்பி இருந்தார். இதற்கு தமிழக அரசு அனுமதி கொடுத்து அரசாணை வெளியிட்டுள்ளது. மேலும் தற்போது நிறைவேற்றப்பட்ட புதிய அரசாணையின் படி இடைநிலை ஆசிரியர்களுக்கு 12,000 ரூபாயும், பட்டதாரி ஆசிரியர்களுக்கு 15,000 ரூபாயும், முதுநிலை ஆசிரியர்களுக்கு 18,000 ரூபாயும் உயர்த்தி ஊதியம் வழங்கப்பட இருக்கிறது.