
மதுரை ஒத்தக்கடை நரசிங்கம் பகுதியில் யானைமலை அடிவாரத்தில் பெருமாள் கோயில் ஒன்று உள்ளது. இந்த கோவிலுக்கு தவெக ஆதரவாளரும், நடிகரும், தனியார் அறக்கட்டளை தலைவருமான சவுந்தர்ராஜன் தனது குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார். அப்போது அவர் தவெக பெயரிலும், தவெக தலைவர் விஜய் பெயரிலும் அர்ச்சனை செய்துவிட்டு வெளியே வந்தார். அப்போது பொதுமக்கள் அவருடன் செல்பி எடுத்துக் கொண்டனர். அப்போது அவர் இதே மகிழ்ச்சியுடன் எப்பொழுதும் இருக்க வேண்டும் என்றும், வருகிற 2026 ஆம் ஆண்டு விஜய்க்கு வாக்களிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
இதையடுத்து அவர் கூறியதாவது, மக்களுக்கு சந்தோஷத்தை கொடுத்து மண்ணுக்குத் தேவையான ஆட்சியை கொடுப்பதற்கான வழியை தவெக தலைவர் விஜய் கையில் எடுத்துள்ளார். எதிர் கட்சியாக இருந்த காலத்தில் கூறிய குறைகளை ஆட்சியாளர்கள் தங்கள் ஆட்சிக்கு வந்தால் செய்வோம் என்று கூறுகின்றனர். ஆனால் எதையும் நிறைவேற்றவில்லை. நாங்கள் இதுவரை ஆட்சிக்கு வரவில்லை. ஆனால் எங்கள் மீது குற்றம் சுமத்த வேண்டிய காரணம் என்ன அச்சுறுத்துறீர்கள், அவமானப்படுத்துவீர்கள், ஆட்சி அதிகாரத்தை வைத்து பயமுறுத்துவீர்கள் இது எல்லாம் விஜய் அண்ணனிடம் செல்லுபடி ஆகாது.
ஏன் இந்த கட்சி தான் மீண்டும் மீண்டும் ஆள வேண்டுமா?. அதிமுக, பாஜக, திமுக, காங்கிரஸ் தவிர வேறு கட்சிகளே இல்லையா? மக்களுக்கான பணியை செய்தால் விமர்சனம் செய்ய வேண்டிய அவசியம் கிடையாது. பாஜக, அதிமுக என மக்களுக்கு நல்லது செய்தால் ஆட்சி பிடிப்பதற்கு எதற்கு போட்டி வருகிறது. மக்கள் யாராவது நிம்மதியாக இருக்கிறார்களா?. இத்தனை ஆண்டுகாலமாக என் தாய் ஒரே கட்சி தான் என்று இருந்தார். ஆனால் தற்போது அவர் தவெகவுக்கு வாக்களிப்பதாக கூறியிருக்கிறார். இது ஒரு சான்று இதுபோன்று பல சான்று உள்ளது. தமிழக வெற்றிக்கழகத்தை எதிர்நோக்கி மக்கள் காத்திருக்கிறார்கள் என்று அவர் கூறினார்.