சென்ற வருடம் நவ,.26 ஆம் தேதி நியூயார்க்கிலிருந்து டெல்லி சென்ற ஏர்இந்தியா விமானத்தில் பெண் பயணியின் மீது ஆண் நபர் ஒருவர் சிறுநீர் கழித்த விவகாரமானது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து விமானப் போக்குவரத்துத்துறை இயக்குநரகம் விசாரணை மேற்கொண்டது. முதல் முறையாக புகார் தெரிவிக்காதது, பிரச்னையை சரியாக கையாளாதது ஆகிய காரணங்களுக்காக உள்நாட்டு விமானப் போக்குவரத்து இயக்குநரகம், ஏர் இந்தியா விமான நிறுவனத்துக்கு 30 லட்சம் ரூபாயை அபராதமாக விதித்து உத்தரவு பிறப்பித்தது.

தற்போது மற்றொரு விவகாரத்தில் ஏர் இந்தியா நிறுவனத்திற்கு, உள்நாட்டு விமான போக்குவரத்து இயக்குநரகம் அபராதம் விதித்து உள்ளது. கடந்த வருடம் டிச,.6ம் தேதியன்று பாரிசிலிருந்து டெல்லி சென்ற ஏர் இந்தியா விமானத்தில் ஆண் பயணி ஒருவர் காலியாக இருந்த பெண் பயணியின் இருக்கையில் சிறுநீர் கழித்ததாக சொல்லப்படுகிறது. இச்சம்பவமும் தற்போது வெளிச்சத்திற்கு வந்த நிலையில் இதுபற்றி விமான போக்குவரத்துத்துறை இயக்குநரகம் விசாரணை நடத்தியது. இதற்கிடையில் சம்பவம் குறித்து விமான போக்குவரத்து இயக்குநரகத்திற்கு ஏர் இந்தியா நிறுவனம் தகவல் தெரிவிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

அதனை தொடர்ந்து பயணி இருக்கையில் சிறுநீர் கழித்த விவகாரம் தொடர்பாக விசாரணை மேற்கொண்ட விமான போக்குவரத்துத்துறை இயக்குநரகம், ஏர் இந்தியா விமான நிறுவனத்துக்கு 10 லட்ச ரூபாயை அபராதமாக விதித்து உத்தரவு பிறப்பித்தது. பெண் பயணி மீதும், இருக்கையிலும் சிறுநீர் கழித்ததாக அடுத்தடுத்து இரண்டு புகார்களில் சிக்கிய ஏர் இந்தியா விமான நிறுவனமானது கடந்த இரு மாதங்களில் மட்டும் 40 லட்ச ரூபாய் வரை அபராதத்தொகையை செலுத்தவுள்ளது குறிப்பிடத்தக்கது.