இந்தியாவில் சமீப காலமாகவே கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்த மாதத்தின் தொடக்கத்தில் தினசரி பாதிப்பு 200 என்ற அளவில் இருந்தது. அதன் பிறகு 1573 ஆக இருந்த நிலையில் தினசரி பாதிப்பு இன்று 2,000-த்தை தாண்டியுள்ளது. இன்று காலை 8 மணி நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2154 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. கடந்த அக்டோபர் மாதம் 28-ஆம் தேதி தொற்று 2,208 ஆக இருந்த நிலையில் தற்போது 5 மாதங்களுக்கு பிறகு மீண்டும் கொரோனா பாதிப்பு 2,000-த்தை தாண்டியுள்ளது.

நேற்று தமிழகத்தில் மட்டும் 105 பேருக்கு புதிதாக தொற்று உறுதியாகயுள்ளது. தினசரி கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி 11,903 பேர் சிகிச்சையில் இருக்கிறார்கள். கொரோனா தொற்றின் காரணமாக நேற்று மகாராஷ்டிராவில் 3 பேர், கர்நாடகாவில் ஒருவர் என 4 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் நேற்று நாடு முழுவதும் 1,42,497 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.