18 ஆண்டுகளுக்கு பிறகு தோனியின் சாதனையை முறியடித்த ஆப்கானிஸ்தான் கீப்பர் பேட்டர் ரஹ்மானுல்லா குர்பாஸ்..

ஆப்கானிஸ்தானை பலரும் ஒரு சிறிய அணியாகவே பார்க்கிறார்கள். ஆனால் அந்த அணி வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் தனது பலத்தை வெளிப்படுத்தி வருகிறது. அணியின் சாதனைகள் மட்டுமின்றி ஆப்கானிஸ்தான் வீரர்கள் தனித்தனியாக சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். தற்போதைய கிரிக்கெட்டில் முன்னணி சுழற்பந்து வீச்சாளர்களில் ஒருவரான ரஷித் கான் மற்றும் திறமையான முஜிபுல் ரஹ்மான் இருவரும் ஆப்கானிஸ்தான் வீரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஆல்ரவுண்டராக அறியப்படும் முகமது நபியும் அந்த அணியின் வீரர் என்பது குறிப்பிடத்தக்கது. ஐபிஎல்லில் இவர்கள் பல அணிகளுக்காக விளையாடி நல்ல புகழைப் பெற்றுள்ளனர்.

வீரர்களின் தனிப்பட்ட செயல்பாடுகளைத் தவிர, சர்வதேச அரங்கில் ஆப்கானிஸ்தான் ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்று அணியின் ரசிகர்கள் விரும்புகிறார்கள். இந்நிலையில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டித் தொடரின் ஒரு பகுதியாக பாகிஸ்தானுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில், ஆப்கானிஸ்தான் பேட்ஸ்மேன்கள் அனல் பறக்கவிட்டனர். முதல் ஒருநாள் போட்டியில், பாகிஸ்தான் பந்துவீச்சாளர்களால் வீழ்த்தப்பட்ட ஆப்கானிஸ்தான் பேட்டிங் ஆர்டர், 2வது ஒருநாள் போட்டியில் அசத்தியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரஹ்மானுல்லா  குர்பாஸ் (151 பந்துகளில் 14 பவுண்டரிகள், 3 சிக்சருடன் 151 ரன்கள்) அதிரடியாக விளையாடினார். ஆப்கானிஸ்தான் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 300 ரன்கள் குவித்தது. இதன் மூலம் பாகிஸ்தான் அணிக்கு 301 ரன்கள் என்ற அபார வெற்றி இலக்கை ஆப்கானிஸ்தான் நிர்ணயித்துள்ளது.

ஆப்கானிஸ்தான் இன்னிங்ஸில் குர்பாஸ் பேட்டிங் சிறப்பானது. தரமான வேகப்பந்து வீச்சுடன் பாகிஸ்தான் பந்துவீச்சாளர்களை அவர் எதிர்கொண்ட விதம் அற்புதம். இவருடன் இப்ராகிம் சத்ரானும் (80) சிறப்பாக விளையாடினார். பாகிஸ்தான் பந்துவீச்சாளர்களில் ஷாஹின் ஷா அப்ரிடி 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். நசீம் ஷா, உசாமா மிர் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். இந்த ஆட்டத்தில் பரபரப்பான இன்னிங்ஸ் ஆடிய ஆப்கானிஸ்தான் வீரர் குர்பாஸ், இந்திய அணியின் ஜாம்பவான் எம்எஸ் தோனியின் சாதனையை முறியடித்தார். விக்கெட் கீப்பராகவும் உள்ள குர்பாஸ், பாகிஸ்தானுக்கு எதிராக 150 ரன்கள் எடுத்த முதல் கீப்பர் என்ற சாதனையை படைத்தார். 2005 ஆம் ஆண்டு விசாகப்பட்டினத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக அதிக ரன்கள் எடுத்த விக்கெட் கீப்பராக எம்எஸ் தோனி (120 பந்துகளில் 148 ரன்கள்) சாதனை படைத்தார். தற்போது ரஹ்மானுல்லா குர்பாஸ் இந்த சாதனையை முறியடித்தார்.

மேலும் இளம் விக்கெட் கீப்பர்-பேட்டர் குர்பாஸ் 151 பந்துகளில் 14 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் பரபரப்பான 151 ரன்கள் எடுத்தார், மேலும் இப்ராஹிம் சத்ரானுடன் ஒரு நம்பமுடியாத 227 ரன் பார்ட்னர்ஷிப்பை உருவாக்கினார். இது ஆப்கானிஸ்தானின் இரண்டாவது அதிகபட்ச பார்ட்னர்ஷிப்பாகும். மேலும், பாகிஸ்தானுக்கு எதிராக 300 ரன்கள் எடுத்ததே அவர்களின் அதிகபட்ச ஸ்கோராகும்.

ஆனால் பாகிஸ்தான் இப்போட்டியில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. 301 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை பாகிஸ்தான் அணி 49.5 ஓவர்களில் 9 விக்கெட் இழந்து எட்டியது. இப்போட்டியில் பாகிஸ்தான் வீரர்களான இமாம் உல் ஹக் 91 ரன்களும், பாபர் அசாம் 53 ரன்களும் எடுத்தனர். மேலும் ஷதாப் கான் 48 ரன்களும், பகர் ஜமான் 30 ரன்களும் எடுத்து வெற்றிக்கு முக்கிய பங்காற்றினர். 3 போட்டிகள் கொண்ட தொடரையும் பாகிஸ்தான் 2-0 என கைப்பற்றியது.