கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூருவில் பனசங்கரி பகுதியை சேர்ந்த 36 வயது இளம்பெண். அதே பகுதியில் 2ஆவது ஸ்டேஜ் சாலையில் தனியாக நடந்து சென்றுள்ளார். அப்போது அந்த வழியாக பைக்கில் இளைஞர் ஒருவர் அந்த இளம் பெண்ணை பின்தொடர்ந்து வந்துள்ளார். அந்தப் பெண்ணின் அருகில் சென்றதும் அவருக்கு தகாத முறையில் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். பின்பு அங்கிருந்து வேகமாக பைக்கை எடுத்துக் கொண்டு சென்றுள்ளார்.

இதனால் பதற்றம் அடைந்த அந்தப் பெண் அந்த இளைஞரின் பைக் நம்பரை குறித்து வைத்து கொண்டு அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு சென்று தனக்கு நடந்த சம்பவத்தை கூறி புகார் அளித்தார். மேலும் அந்த இளைஞரின் பைக் எண்ணையும் காவல்துறையிடம் கொடுத்துள்ளார். இந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் பைக் பதிவு எண்ணை வைத்து அந்த இளைஞரை தேடி வந்தனர்.

இந்த விசாரணையில் அந்த இளைஞர் அசாம் மாநிலத்தை சேர்ந்த இஸ்லாமுத்தின்(31) என்பவர் என தெரிய வந்தது. அதன் பின் அவரை கைது செய்து அவரிடம் தொடர்ந்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணையில் அந்த இளம் பெண் சாலையில் தனியாக சென்று கொண்டிருந்ததை கவனித்ததால் அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளதாக இஸ்லாமுத்தின் தெரிவித்துள்ளார்.