கடந்த 3 மாதங்களுக்கு முன்பு, தென் சீனாவின் ஜிஷுவாங்பன்னா ப்ரிமிட்டிவ் ஃபாரஸ்ட் பார்க் பகுதியில் அமைந்துள்ள அக்வேரியத்தில், கடல் கன்னி போல் வேடமணிந்து நிகழ்ச்சி வழங்கிய ரஷ்ய நாட்டு பெண் மேஷா மீது ஒரு பெரிய மீன் தாக்குதல் நடத்திய அதிர்ச்சிகரமான வீடியோ சமூக ஊடகங்களில் பரவலாக வைரலாகியது.

22 வயதான மேஷா, நீர் தொட்டியில் கடல் கன்னி உடையில் நீந்திக்கொண்டிருக்கும் போது, பார்வையாளர்களுக்கு கைகாட்டினார். ஆனால், திடீரென மேல்புறத்திலிருந்து வந்த ஒரு பெரிய மீன், தன்னுடைய விரிந்த வாயால் அவரது முகத்தை பிடித்து கடிக்கிறது.

 

இந்த தாக்குதலின் போது, குழந்தைகள் மற்றும் பார்வையாளர்கள் பயத்தில் அலறினர். தாக்கிய மீன் மேஷாவின் கழுத்து, கண், தலை பகுதிகளில் காயங்களையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதலை நிகழ்த்திய மீனின் வகையை பற்றி அதிகாரப்பூர்வ தகவல் வெளியிடப்படவில்லை என்றாலும், அப்பகுதியிலுள்ள நீர்த்தொட்டிகளில் மெகாங்க் மற்றும் யாங்ஸி ஆறுகளின் நாட்டுப்புற மீன்கள் வைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்த தாக்குதல் சம்பவத்திற்கு பிறகு மேஷாவுக்கு வெறும் 100 அமெரிக்க டாலர் வழங்கப்பட்டதாகவும், இச்சம்பவத்தைப் பற்றி வெளியே பேச கூடாது என தடைவிதிக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும், காயமடைந்த நிலையிலேயே மீண்டும் நீரில் இறங்கி நிகழ்ச்சி தொடர உத்தரவிடப்பட்டதாக மேஷா கூறியுள்ளார். இந்த சம்பவம் நடந்து 3 மாதங்கள் ஆகிய நிலையில், தற்போது இந்த வீடியோ இணைய தளத்தில் வைரலாகி வருகிறது.