
உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள கிஸ்வாபூர் கிராமத்தில் திருமணத்திற்கு சில மணி நேரங்கள் மட்டுமே உள்ள நிலையில் மணமகள் திடீரென உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
20 வயதான ரிங்கி பாத்தம் என்ற இளம்பெண், சனிக்கிழமை மாலை திருமணத்திற்கு முந்தைய நாள் சடங்குகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது திடீரென கடுமையான வயிற்றுவலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
உடனடியாக குடும்பத்தினர் அவரை அருகிலுள்ள தனியார் மருத்துவரிடம் அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்கு ஒரு மருந்து ஊசி செலுத்தப்பட்டது.
அந்த ஊசியை எடுத்ததற்குப் பிறகு, ரிங்கியின் உடல்நிலை மிகவும் மோசமடைந்ததாகக் கூறப்படுகிறது. அச்சமயத்தில், குர்சஹைகஞ்ச் சமூக சுகாதார மையத்திற்கு அவசரமாக அழைத்துச் செல்லும் வழியிலேயே ரிங்கி உயிரிழந்தார்.
இதைத் தொடர்ந்து, உமர்தா கிராமத்திலிருந்து வரவிருந்த மணமகன் ராகுல், இச்செய்தியைக் கேட்டவுடன் திருமண ஊர்வலத்துடன் திரும்பிச் சென்றார்.
அதன்பின் மணமகளின் தந்தை மகேஷ் பாத்தம், “இது மருத்துவரின் அலட்சியத்தால் நடந்த துயரம்,” என்று தெரிவித்தார். அவருடைய புகாரின் அடிப்படையில், குர்சஹைகஞ்ச் காவல்துறையினர் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
மாவட்ட மருத்துவ அதிகாரி டாக்டர் ஸ்வதேஷ் குப்தா கூறுகையில், “மருத்துவ அலட்சியம் ஏற்பட்டது என்பதற்கான ஆதாரங்கள் கிடைத்தால், சம்பந்தப்பட்ட மருத்துவருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்,” என கூறினார்.
இந்நிலையில், ஊசி மருந்தால் ஏற்படும் ‘அனாபிலாக்டிக் ஷாக்’ அல்லது பிற உடல் எதிர்வினைகள் காரணமாக இந்த மரணம் நிகழ்ந்ததா என்பது குறித்து தடயவியல் நிபுணர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.
இரு குடும்பங்களும் திருமண ஏற்பாடுகளை ரத்து செய்த நிலையில், முழு கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது. “இதுபோன்ற துயர சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் இருக்க சுகாதார சீர்திருத்தங்கள் அவசியம்,” என்று உள்ளாட்சி உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.மேலும் அதிகாரிகள், இச்சம்பவம் தொடர்பான முழுமையான விசாரணை நடத்தப்படும் என்று உறுதியளித்துள்ளனர்.