
செங்கல்பட்டு மாவட்டத்தின் கலெக்டராக இருப்பவர் அருண்ராஜ். இவருடைய தந்தை ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி சமுத்திரபாண்டியன். இவருக்கும் அதிமுக முன்னாள் அமைச்சர் பொள்ளாச்சி ஜெயராமனின் நெருங்கிய உறவினரின் மகள் டாக்டர் கவுசிகாவுக்கும் திருமண நிச்சயதார்த்தம் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பாக நடைபெற்றது. இதைத் தொடர்ந்து நேற்று திருப்பூரில் உள்ள கந்தசாமி கோவிலில் உற்சவர் மண்டபத்தில் இவர்கள் இருவருக்கும் எளிய முறையில் திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தையொட்டி அங்கு பூ அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.
மேலும் கோவில் நிர்வாகத்தின் சார்பில் சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருந்தன. இந்த நிகழ்ச்சியில் தா. மோ. அன்பரசன் நேரில் கலந்து கொண்டு மணமக்களை ஆசீர்வதித்தார். மேலும் இருவீட்டார்களும், பல்வேறு அரசு துறை சார்ந்த அலுவலர்களும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். இவர்களது வரவேற்பு விழா வருகிற 14-ம் தேதி சென்னை திருவான்மியூரில் உள்ள ராமச்சந்திரா கன்வென்ஷன் மையத்தில் நடைபெற உள்ளது. இவர்களது திருமணத்தையொட்டி முருகன் கோவிலில் ஏராளமான காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் நேற்று முகூர்த்த நாள் என்பதால் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டனர்.