தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அ.கொல்லஅள்ளி வேடியப்பன் திட்டுப்பகுதியில் விவசாயியான சதீஷ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சென்னகேசவ பெருமாள் கோவிலில் வைத்து பிரியங்கா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் ஜல்லிக்கட்டு காளைகள் மற்றும் நாட்டு மாடுகளை பாதுகாக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தாங்கள் வளர்த்து வந்த ஜல்லிக்கட்டு காளைகளுக்கு மரியாதை செய்த பிறகு சதீஷ்குமாரும், பிரியங்காவும் திருமணம் செய்து கொண்டனர். இதுகுறித்து சதீஷ்குமார் கூறியதாவது, தமிழ்நாட்டில் கலப்பின மாடுகளை அதிகமாக இருக்கிறது.

மேலும் ஜல்லிக்கட்டு காளைகள் மற்றும் நாட்டு மாடுகளின் எண்ணிக்கை குறைவாகவே இருக்கிறது. அதனை பாதுகாக்க விழிப்புணர்வை ஏற்படுத்தும் பொருட்டு காளைகளுக்கு மரியாதை செய்த பிறகு தான் திருமணம் நடத்த வேண்டும் என முடிவு செய்தோம். அதன்படி நாங்கள் வளர்த்து வரும் ஜல்லிக்கட்டு காளை, பசு மாடுகளுக்கு பூமாலை அணிவித்து குங்குமம் திலகமிட்டு மரியாதை செலுத்திய பிறகு நாங்கள் திருமணம் செய்து கொண்டோம் என கூறியுள்ளார். மேலும் ஒவ்வொரு விவசாயியும் நாட்டு மாடுகளை வளர்த்து விவசாயத்தை பெருக்கி பாரம்பரியத்தை பாதுகாக்க வேண்டும் என அவர் கூறியுள்ளார்.