ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் வசந்த காலம் தொடங்கியுள்ள நிலையில், வழக்கத்தைவிட கடுமையான வெப்பம் நிலவி வருகிறது. செப்டம்பர் மாத சராசரி வெப்பநிலையை விட சுமார் 13 டிகிரி செல்சியஸ் அதிகமாக, வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பசிபிக் பெருங்கடலில் உருவாகியுள்ள வலுவான எல் நினோ வானிலை அமைப்பு காரணமாக ஆஸ்திரேலியாவின் தெற்குப் பகுதிகளில் வழக்கத்தைவிட வெப்பமான மற்றும் வறண்ட சூழல் நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனுடன் பலத்த காற்றும் வீசுவதால் காட்டுத்தீ ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளது.
இதையடுத்து, சிட்னி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் தீ அபாயம் ‘மிகவும் தீவிரம்’ என்ற நிலைக்கு உயர்ந்துள்ளது. இதனால் பொதுமக்கள் வெளிப்புறங்களில் நெருப்பு மூட்டுவதற்கு அதிகாரிகள் முழுமையான தடையை அறிவித்துள்ளனர்.
ஆஸ்திரேலியா காட்டுத்தீ அபாயம் அதிகம் உள்ள நாடுகளில் ஒன்றாக இருப்பதால், இதுபோன்ற வெப்பம், வறட்சி மற்றும் பலத்த காற்று நிலவும் காலங்களில் தீ பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படுகின்றன. குறிப்பாக ஒரு சிறிய தீப்பொறிகூட வேகமாக காட்டுத்தீயாக மாறக்கூடிய சூழல் இருப்பதால், பொதுமக்கள் அதிகாரிகளின் எச்சரிக்கைகளைப் பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
