டெல்டா விவசாயிகளின் உயிர் மூச்சாக விளங்கும் மேட்டூர் அணையிலிருந்து, காவிரி டெல்டா பாசனத்திற்காக தமிழக முதலமைச்சர் விஜய் அவர்கள் இன்று நேரில் சென்று தண்ணீரைத் திறந்து வைத்தார். பாரம்பரிய முறைப்படி பட்டு வேட்டி, சட்டை அணிந்து வந்திருந்த முதலமைச்சருக்கு, அப்பகுதி மக்கள் மற்றும் விவசாயிகள் ‘பொன்னி நதியின் புதல்வன்’ என்ற பட்டத்துடன் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12-ஆம் தேதி மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்திற்குத் தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். ஆனால், நடப்பாண்டில் அணையில் போதிய நீர் இருப்பு இல்லாத காரணத்தினால் குறிப்பிட்ட நாளில் தண்ணீர் திறக்கப்படவில்லை. இதனால் காவிரி டெல்டா விவசாயிகள் கடும் ஏமாற்றம் அடைந்தனர்.
இதற்கிடையே, கர்நாடகாவில் பெய்த கனமழையால் கபினி மற்றும் கே.ஆர்.எஸ். அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உபரிநீர் காவிரியில் திறக்கப்பட்டது. இதன் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து நீர்மட்டம் தாண்டியதை அடுத்து, விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று இன்று தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் காலை சேலம் வந்தடைந்த முதலமைச்சர் விஜய்க்கு, வழிநெடுகிலும் சாலையின் இருபுறமும் திரண்டிருந்த பொதுமக்கள் மற்றும் கட்சியினர் மலர்களைத் தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர். விமான நிலையம் முதல் மேட்டூர் வரை சாலைகள் முழுவதும் கட்சிக் கொடிகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன.
தொடர்ந்து, நண்பகல் 11.40 மணி அளவில் மேட்டூர் அணையின் மேல்மட்ட மதகை மின்விசை மூலம் இயக்கி டெல்டா பாசனத்திற்குத் தண்ணீரைத் திறந்து வைத்தார். ஆரம்பத்தில் வினாடிக்கு 5,000 கன அடி வீதம் திறக்கப்படும் இந்த நீர், படிப்படியாக 12,000 கன அடியாக அதிகரிக்கப்படவுள்ளது. இந்தத் தண்ணீர் இன்று முதல் 45 நாட்களுக்குத் திறக்கப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, நீர்வளத்துறை சார்பில் அமைக்கப்பட்டிருந்த அணை குறித்த விளக்க புகைப்படக் கண்காட்சியைப் பார்வையிட்டதுடன், அணை மின் நிலையத்தையும் முதலமைச்சர் ஆய்வு செய்தார். மேலும் மேட்டூர் அணை மூலம் சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் உள்ள சுமார் 17.10 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் இதன் மூலம் பாசன வசதி பெறுகின்றன.
