கர்நாடக மாநிலம் தார்வாடில் நடைபெற்ற சமூக மற்றும் தேசிய அளவிலான பிரச்னைகள் குறித்த கலந்தாய்வு நிகழ்ச்சியில் கலந்துகொள்ளச் சென்ற பிரபல நடிகர் பிரகாஷ் ராஜுக்கு எதிராக திடீர் போராட்டம் வெடித்தது. நிகழ்ச்சியில் அவர் இந்துக்களுக்கு எதிராகப் பேசுவார் என்று குற்றம்சாட்டிய சில இந்துத்துவ அமைப்பினரும், பா.ஜ.க ஆதரவாளர்களும் அரங்கத்தை முற்றுகையிட முயன்றதுடன், அவரது சுவரொட்டிகள் மற்றும் பேனர்கள் மீது மையை ஊற்றிச் சேதப்படுத்தினர். பாதுகாப்புப் பணியில் இருந்த காவல்துறையினர் உடனடியாகத் தலையிட்டுப் போராட்டக்காரர்களைக் கைது செய்து அப்புறப்படுத்தியதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து தன் எக்ஸ் பக்கத்தில் ஆவேசமான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள நடிகர் பிரகாஷ் ராஜ், நாட்டின் தற்போதைய சூழல் குறித்துக் கேள்வி கேட்பவர்களையும், கருத்துத் தெரிவிப்பவர்களையும் பா.ஜ.க தரப்பு விரும்பவில்லை என்று குற்றம்சாட்டியுள்ளார். தன்னைப்போன்றவர்களின் குரல்களை ஒடுக்குவதற்காகச் சுவரொட்டிகள் மீது மை வீசுவது போன்ற சிறுபிள்ளைத்தனமான மற்றும் மலிவான மிரட்டல் வேலைகளில் எதிர்ப்பாளர்கள் ஈடுபடுவதாக அவர் கடுமையாகச் சாடியுள்ளார். மேலும், கேள்விகளுக்குப் பதிலளிக்கத் திராணியில்லாமல் வன்முறையைக் கையாள்பவர்கள் எப்போதுமே கோழைகளாகத்தான் கருதப்படுவார்கள் என்றும் அவர் விளாசியுள்ளார்.
View this post on Instagram
தொடர்ந்து பேசிய அவர், “சினிமாவில் வேண்டுமானால் ரவுடிகளைப் பயன்படுத்துவதும், தடி அடிகளை நடத்துவதும் போன்ற காட்சிகளில் நடித்துப் பெயர் பெறலாம்; ஆனால் நிஜ வாழ்க்கையில் அதிகாரத்தைப் பயன்படுத்தி எழும் மக்களின் குரல்களை ஒடுக்க நினைப்பது முற்றிலும் சட்டவிரோதமானது” என்று எச்சரித்துள்ளார். மையை மனிதர்கள் மீது வீசி வீணடிக்காமல் படிக்கவும் எழுதவும் பயன்படுத்துங்கள் என்ற கருத்தை முன்வைத்த பிரகாஷ் ராஜ், இதுபோன்ற மிரட்டல்களுக்குப் பயந்து பின்வாங்கப் போவதில்லை என்றும், எந்தத் தடை வந்தாலும் மக்களுக்கான விழிப்புணர்வு உரைகளும் கேள்டிகளும் தொடர்ந்து தொடரும் என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
