கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் தன்னை வெற்றி பெற்ற வேட்பாளராக அறிவிக்கக் கோரியும், அங்கு நடைபெற்ற தேர்தல் முடிவுகளை ரத்து செய்யக் கோரியும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளது. இந்த வழக்கில் மு.க.ஸ்டாலின் சார்பாக மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் ஆஜராகி வாதாடிய நிலையில், தேர்தல் ஆணையம் (ECI) தரப்பிலும் கடுமையான எதிர்ப்புகள் பதிவு செய்யப்பட்டன.
விசாரணையின் போது தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், “மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்துள்ள இந்த மனு விசாரணைக்கே உகந்தது அல்ல. தேர்தல் முடிவுகள் வெளியாகி நடைமுறைகள் நிறைவடைந்த பிறகு இத்தகைய வழக்குகளை நீதிமன்றம் அனுமதிப்பது தேவையற்ற சட்டச் சிக்கல்களுக்கும் தேக்கநிலைக்கும் மட்டுமே வழிவகுக்கும்” எனத் தெரிவித்து மனுவைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என வாதிட்டார்.
இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் மு.க.ஸ்டாலின் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் வாதாடுகையில், “வாக்குப்பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கையில் பல்வேறு முறைகேடுகளும் சந்தேகங்களும் எழுந்துள்ள நிலையில், பாதிக்கப்பட்ட மனுதாரரைத் தீர்வு ஏதுமற்ற நிலையில் அப்படியே விட்டுவிட முடியாது.
நீதியை உறுதி செய்ய நீதிமன்றம் இந்த மனுவை முழுமையாக விசாரிக்க வேண்டும்” எனத் தீவிரமாக வலியுறுத்தினார். இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த சென்னை உயர் நீதிமன்றம், மனு மீதான உத்தரவை ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது.
