தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில் வீடு மற்றும் மனைகளை வாங்கி, தவணைக் காலம் முடிந்தும் நீண்ட நாட்களாகப் பணத்தைச் செலுத்தாமல் நிலுவை வைத்துள்ள கடன்தாரர்களுக்கு உதவும் வகையில், தமிழக அரசு ஒரு மாபெரும் வட்டி தள்ளுபடி சலுகையை அறிவித்துள்ளது. வீட்டு வசதி வாரியத்தில் நிலுவையில் உள்ள தொகையை ஒரே தவணையில் செலுத்துபவர்களுக்கு, அவர்களின் அபராத வட்டி முழுமையாகத் தள்ளுபடி செய்யப்படும் என அமைச்சர் ராஜ்குமார் அவர்கள் சட்டப்பேரவையில் அதிரடியாக அறிவித்துள்ளார்.

​சட்டமன்றக் கூட்டத்தொடரில் இது குறித்து விரிவாகப் பேசிய அமைச்சர் ராஜ்குமார், வரும் 31.03.2026-க்கு முன்பாக வீட்டு வசதி வாரியத்திற்குச் செலுத்த வேண்டிய நிலுவையில் உள்ள அடமானக் கடன்கள், கட்டுமானக் கடன்கள் மற்றும் இதரக் கடன்களுக்கான அபராத வட்டி (Penal Interest) மற்றும் இ.எம்.ஐ வட்டி (EMI Interest) ஆகியவை முழுமையாகத் தள்ளுபடி செய்யப்படுவதாகத் தெரிவித்தார். இந்தச் சலுகையைப் பயன்படுத்தி கடன்தாரர்கள் தங்களின் நிலுவைத் தொகையை ஒரே தவணையில் செலுத்திப் பயன்பெறலாம் எனக் கேட்டுக்கொண்டார்.

​தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில் நீண்ட காலமாக வசூலாகாமல் தேங்கிக் கிடக்கும் நிலுவைக் கடன்களை விரைவாக வசூலிப்பதற்கும், அதே வேளையில் கடன் வாங்கிப் பணத்தைச் செலுத்த முடியாமல் தவித்து வரும் எளிய மக்களின் வட்டிச் சுமையைக் கணிசமாகக் குறைப்பதற்கும் இந்த அதிரடி முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ராஜ்குமார் அவர்கள் சுட்டிக்காட்டினார்.

​அரசின் இந்த அதிரடி வட்டி தள்ளுபடி அறிவிப்பு, தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் மூலம் வீடுகள் மற்றும் மனைகளைப் பெற்று வட்டி சுமையால் அவதிப்பட்டு வந்த ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்கு மிகப்பெரிய நிம்மதியையும் மகிழ்ச்சியையும் அளித்துள்ளது. பொதுமக்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தித் தங்களின் நிலுவைத் தொகையை ஒரே தவணையில் செலுத்தி வட்டி விலக்கைப் பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.