நேபாளத்தின் கோஷி ஆற்றுப் பகுதியில் ஏற்பட்டுள்ள கடுமையான வெள்ளப் பெருக்கிற்கு இடையே, சீனா-நேபாள எல்லையில் மற்றுமொரு இயற்கை ஏரி (உருவாவது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஏரியில் இருந்து ஏற்கனவே தண்ணீர் வெளியேறத் தொடங்கியுள்ள நிலையில், வரும் நாட்களில் நீர்வரத்து அதிகரித்து ஏரி உடைந்தால் நேபாளத்திற்குப் பெரிய ஆபத்து ஏற்படும் எனச் சீனா எச்சரித்துள்ளது. கிட்டத்தட்ட 72 மணி நேரம் மிகவும் கவனத்துடன் இருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திபெத்தில் இருந்து உற்பத்தியாகும் சொச்சன் கோலா மற்றும் புரேபு சாங்போ ஆகிய ஆறுகள் சங்கமிக்கும் இடத்தில் இந்த இயற்கை ஏரி உருவாகியுள்ளது. இங்கிருந்து நேபாளத்திற்குள் பாயும் ஆறுகளே ‘போட்கோஷி’ என்று அழைக்கப்பட்டு, பின்னர் திரிசூலி ஆற்றுடன் இணைகின்றன. வியாழக்கிழமை காலை நிலவரப்படி, இந்த ஏரியில் சுமார் 20 லட்சம் கன மீட்டர் நீர் சேர்ந்துள்ளது. அடுத்த மூன்று நாட்களில் மேலும் 30 லட்சம் கன மீட்டர் நீர் சேரக்கூடும் என்பதால், ஏரியின் இயற்கைக் கரை உடைந்து பேரழிவு ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளது.
நேபாள எல்லைக்கு அருகிலுள்ள இந்த ஏரியின் நீர்மட்டத்தைச் சீன அதிகாரிகள் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர். ஏரி திடீரென உடைந்தால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்தும், உடனடியாக மேற்கொள்ள வேண்டிய அவசரகால மீட்புப் பணிகள் குறித்தும் செயற்கைக்கோள் தரவுகள் மூலம் சீனா ஆய்வு செய்து வருகிறது.
முன்னதாக, புதன்கிழமை காலை நேபாளத்தின் ரசுவா மாவட்டத்தில் உள்ள கோஷி ஆற்றில் திடீரெனப் பாய்ந்த வெள்ளத்தில் நூற்றுக்கணக்கானோர் பலியாகினர்; பலர் மாயமாகியுள்ளனர். பாலம், சாலைகள் உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகள் கடுமையாகச் சேதமடைந்துள்ளன. இந்தத் துயரத்தில் இருந்து மீட்புக் குழுவினர் மக்களை மீட்கப் போராடி வரும் வேளையில், புதிய ஏரி உடைந்து மீண்டும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டால் பெரும் அசம்பாவிதம் ஏற்படும் என்பதால் எல்லைப் பகுதிகளில் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.
