சீனாவில் உள்ள சுற்றுலாப் பூங்கா ஒன்றில், பெண் ஒருவர் குழந்தையைத் தூக்கிக் கொண்டு உயிருள்ள பெரிய ஆமையின் மீது ஏறி நின்றுகொண்டு அராஜகத்தில் ஈடுபட்ட சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது சீனாவின் குவாங்டாங் மாகாணத்தில் உள்ள ஃபோஷான் பகுதியில் அமைந்துள்ள பூங்காவில் உள்ள ஆமைகள் காட்சியகத்தில் கடந்த வெள்ளிக்கிழமை இந்தச் சம்பவம் நடந்துள்ளது.
அங்குள்ள ஆமைப் பகுதியில், பெண் ஒருவர் ஒரு சிறுமியைத் தூக்கிக் கொண்டு ராட்சத ஆப்பிரிக்க ஸ்பர் ஊதாமை ஒன்றின் முதுகின் மீது ஏறி நின்றுகொண்டுள்ளார். பாரம் தாங்காமல் அந்த விலங்கு சிரமப்பட்டு நகர்ந்தபோதும், அந்தப் பெண் அதைப் பொருட்படுத்தாமல் சிரித்துக்கொண்டே அருகில் இருந்த மற்றொரு சிறுவனையும் ஆமை மீது ஏறுமாறு சைகை செய்து அழைத்துள்ளார். இதைக் கண்ட அங்கிருந்த சுற்றுலாப் பயணிகள் அதிர்ச்சியடைந்தனர்.
ஆமைகள் மீது யாரும் ஏறவோ அல்லது உட்காரவோ கூடாது என்று அங்கு தெளிவாக எச்சரிக்கைப் பலகைகள் வைக்கப்பட்டிருந்தன. இருப்பினும், அந்தப் பெண் எந்தவித அச்சமும் இல்லாமல் அந்த விதியை மீறியுள்ளார். அப்போது அருகில் பணியாளர்கள் யாரும் இல்லாததால் உடனடியாகத் தடுத்து நிறுத்த முடியவில்லை. இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதை அடுத்து, விலங்கு நல ஆர்வலர்கள் மற்றும் நெட்டிசன்கள் அந்தப் பெண்ணுக்கு எதிராகக் கடும் கண்டனங்களைப் பதிவு செய்தனர்.
A woman was seen holding a young child while standing directly on the back of a tortoise at the Chuanlord Tourism Leisure Expo Park in Foshan, Guangdong, on 21 August. #hkeye #tortoise #animals pic.twitter.com/M7hm8xAIl5
— HKeye (@HKeye_) August 26, 2026
இணையத்தில் எழுந்த கடும் எதிர்ப்பைத் தொடர்ந்து, பூங்கா நிர்வாகம் உடனடியாகத் தலையிட்டு அந்த ஆமைக்கு கால்நடை மருத்துவர் மூலம் பரிசோதனை ஒன்றை ஏற்பாடு செய்தது. பரிசோதனைக்குப் பிறகு ஆமை நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதாகப் பூங்கா தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், இதுகுறித்து நிர்வாகம் தனது கள மேலாண்மையில் உள்ள குறைபாடுகள் குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும் கூறியது.
ஆமையின் ஓடு என்பது வெறும் மேலோடு மட்டுமல்ல; அது விலங்கின் முதுகுத் தண்டு மற்றும் விலா எழும்புகளுடன் இணைக்கப்பட்ட ஒரு முக்கியமான உடல் பகுதியாகும். அதில் நரம்புகளும் ரத்த நாளங்களும் இருப்பதால், மனிதர்களின் அதிகப்படியான எடை அதன் ஓட்டை உடைக்கவோ அல்லது முதுகெலும்பு மற்றும் உள் உறுப்புகளைப் பாதிக்கவோ வாய்ப்புள்ளது என்று பூங்கா நிர்வாகம் எச்சரித்துள்ளது. இந்தச் சம்பவத்தில் இடம்பெற்றது உலகின் மிகப்பெரிய நில ஆமை வகைகளில் ஒன்றான ‘சுல்காடா’ ஆமை என்பது குறிப்பிடத்தக்கது.
