இன்டர்நெட் உலகில் எப்போது என்ன வைரலாகும் என்றே கணிக்க முடியாது. அந்த வகையில், தற்போது இலங்கை கிரிக்கெட் வரலாற்றின் பொற்காலத்தை நினைவுபடுத்தும் ஒரு நெகிழ்ச்சியான மற்றும் ஆச்சரியமான சம்பவம் சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது.

இலங்கையின் கொழும்பு நகரில் நடைபெற்ற ஒரு தொண்டு கிரிக்கெட் போட்டியில், அந்நாட்டின் முன்னாள் ஜாம்பவான்களான அர்ஜுனா ரணதுங்காவும், உபுல் சந்தனாவும் களமிறங்கி ரசிகர்களுக்கு பழைய நினைவுகளை மீட்டுத் தந்துள்ளனர். இந்தப் போட்டியில், 55 வயதான உபுல் சந்தனா எடுத்த பிரம்மாண்டமான கேட்சும், முன்னாள் கேப்டன் அர்ஜுனா ரணதுங்காவின் அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிய உடல் எடையும் இணையத்தை அதிரவிட்டுள்ளது.

90-களில் இலங்கை அணியின் தலைசிறந்த ஃபீல்டர்களில் ஒருவராக வலம் வந்தவர் உபுல் சந்தனா. தற்போது வயது 55 ஆனாலும், அவரது உடற்கட்டும், சுறுசுறுப்பும் கொஞ்சமும் குறையவில்லை என்பதை இந்தப் போட்டி நிரூபித்துள்ளது.

 

அர்ஜுனா ரணதுங்கா வீசிய பந்தில், பேட்ஸ்மேன் அடித்த பந்தை நோக்கி மின்னல் வேகத்தில் பாய்ந்து, மைதானத்தில் முழு நீள டைவ் அடித்து உபுல் சந்தனா பிடித்த அசத்தலான கேட்ச் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. 90-களில் அவர் எப்படிப்பட்ட ஒரு அசாத்திய ஃபீல்டராகத் திகழ்ந்தாரோ, அதே காட்சியைக் கண்முன்னே கொண்டு வந்து நிறுத்தியது இந்தத் தருணம். இந்த நிகழ்வில் உபுல் சந்தனாவின் உடற்தகுதி ஒருபுறம் ஆச்சரியப்படுத்தினால், மறுபுறம் முன்னாள் உலகக் கோப்பை வின்னிங் கேப்டன் அர்ஜுனா ரணதுங்காவின் தோற்றம் அனைவரையும் உறைந்துபோகச் செய்தது.

விளையாடிய காலத்தில் சற்று குண்டான தோற்றத்துடன் வலம் வந்த ரணதுங்கா, சமீபத்தில் செய்த பேரியாட்ரிக் அறுவை சிகிச்சைக்கு பிறகு சுமார் 52 கிலோ எடையைக் குறைத்துள்ளார். இதனால், அவரைப் பார்த்த கிரிக்கெட் ரசிகர்கள், “இது நிஜமாகவே அர்ஜுனா ரணதுங்காதானா?” என்று ஆச்சரியத்துடன் அடையாளம் காண முடியாத அளவிற்கு முற்றிலுமாக மாறியுள்ளார்.

இலங்கை அணிக்கு எதிராக டெஸ்ட் போட்டிகள் நடைபெற்று வரும் சூழலில், கொழும்புவில் உள்ள தர்ஸ்டன் கல்லூரி மைதானத்தில் இந்தச் சிறப்புத் தொண்டு போட்டி நடைபெற்றது. இங்கிலாந்தின் ‘நார்தம்ப்டன் செயிண்ட்ஸ்’ ரக்பி அணியின் ப்ரீ-சீசன் டூர் நிகழ்வின் ஒரு பகுதியாக இது ஏற்பாடு செய்யப்பட்டது. இங்கிலாந்து ரக்பி வீரர்களும், ஆசிய பசிபிக் லயன்ஸ் வீரர்களும் இணைந்து, இலங்கை கிரிக்கெட் ஜாம்பவான்கள் கொண்ட நட்சத்திர அணிக்கு எதிராகக் களமிறங்கினர். ‘லங்கா அல்சைமர்ஸ் பவுண்டேஷன்’ அமைப்புக்காக நிதி திரட்டும் நோக்கத்தோடு நடைபெற்ற இந்த நிகழ்வு, ரசிகர்களுக்கு மறக்க முடியாத ஒரு விருந்தாக அமைந்தது.