கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உணவகத்தில் சாப்பிட்ட பெண்ணுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக கூறப்பட்ட புகாரில், உணவக உரிமையாளர் மற்றும் மேலாளர் இணைந்து ரூ.96,500 இழப்பீடு வழங்க வேண்டும் என்று நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. ரன்னியில் செயல்பட்டு வரும் கிங்ஸ் பிரியாணி கஃபேவில் இந்த சம்பவம் நடந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மருத்துவச் செலவு, இழப்பீடு மற்றும் வழக்குச் செலவு என மொத்த தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
வெச்சூச்சிரா பகுதியைச் சேர்ந்த ரீனா தாமஸ் என்பவர், கடந்த 2025-ம் ஆண்டு அக்டோபர் 21-ஆம் தேதி தனது சகோதரியுடன் உணவகத்துக்குச் சென்றதாக புகாரில் தெரிவித்துள்ளார். அங்கு அரபு வகை உணவான அல்ஃபஹாம் ஆர்டர் செய்து சாப்பிட்டபோது, அதன் சுவையில் வித்தியாசம் இருப்பதை அவர் கவனித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து உணவக ஊழியரிடம் தெரிவித்தபோது, உணவில் எந்தப் பிரச்சினையும் இல்லை என்றும், அது தங்களது எண்ணம் மட்டுமே என்றும் கூறியதாக புகார் தெரிவிக்கிறது. உணவுக்காக ரூ.740-ஐ வங்கி அட்டை மூலம் செலுத்தியதாகவும் கூறப்பட்டுள்ளது.
உணவு சாப்பிட்டுவிட்டு வீட்டுக்குத் திரும்பும் வழியிலேயே ரீனா தாமஸுக்கு வாந்தி மற்றும் வயிற்றுவலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. பின்னர் தலைச்சுற்றல், வாந்தி மற்றும் உடல் பலவீனம் அதிகரித்ததால் முதலில் அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார். உடல்நிலை தொடர்ந்து பாதிக்கப்பட்டதால் காஞ்சிரப்பள்ளியில் உள்ள மற்றொரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சுமார் ஒரு வாரம் சிகிச்சை பெற்றதாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவர்கள், சமைக்கப்படாத அல்லது பழைய உணவை உட்கொண்டதால் சால்மோனெல்லா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்று தெரிவித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த புகாரை விசாரித்த பத்தனம்திட்டா மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம், மருத்துவமனையில் வழங்கப்பட்ட சிகிச்சை ஆவணங்கள் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தது. உணவக உரிமையாளர் விசாரணைக்கு ஆஜரான நிலையில், மேலாளர் நோட்டீஸ் பெற்றும் ஆஜராகவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து பெண்ணின் குற்றச்சாட்டுகள் ஆதாரங்களால் உறுதி செய்யப்பட்டதாக ஆணையம் தெரிவித்தது. அதன்படி உணவக உரிமையாளர் மற்றும் மேலாளர் இணைந்து ரூ.36,500 மருத்துவச் செலவாகவும், ரூ.50,000 இழப்பீடாகவும், ரூ.10,000 வழக்குச் செலவாகவும் என மொத்தம் ரூ.96,500-ஐ 30 நாட்களுக்குள் வழங்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
