தில்லி நிஹால் விஹார் பகுதியில் 31 வயதான மென்பொருள் பொறியாளர் வினய் குமார் குப்தா உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆகஸ்ட் 21-ஆம் தேதி குழந்தைகளுக்கு மருந்து தடவுவது தொடர்பாக வினய்க்கும் அவரது மனைவி ரேகாவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து வீட்டை விட்டு வெளியே சென்ற ரேகா, சிறிது நேரத்தில் தனது குடும்பத்தினருடன் திரும்பி வந்ததாக குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர். அதன்பிறகு வீட்டுக்குள் வினயிடம் கடுமையான தாக்குதல் நடந்ததாக அவரது தாயார் குற்றம்சாட்டியுள்ளார். மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் வினய் உயிரிழந்தார்.
வினயின் தாயார் கூறிய தகவலின்படி, சுமார் இரண்டு மாதங்களுக்கு முன்பு அவரது மருமகளின் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர், “நாங்கள் மாப்பிள்ளைகளை கொன்றுவிடுவோம்” என்று மிரட்டியதாக கூறப்படுகிறது. அப்போது அதை கோபத்தில் கூறிய வார்த்தையாகவே தாங்கள் நினைத்ததாகவும், அந்த வார்த்தைகள் ஒருநாள் இவ்வளவு பெரிய சோகத்தை ஏற்படுத்தும் என்று நினைக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். வினய்க்கும் அவரது மனைவிக்கும் இடையே ஏற்கெனவே கருத்து வேறுபாடுகள் இருந்ததாகவும், மகன் தனது குடும்ப வாழ்க்கை குறித்து தன்னிடம் வருத்தப்பட்டதாகவும் தாயார் கூறியுள்ளார். தற்போது அந்த பழைய மிரட்டல் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சம்பவத்தன்று ரேகா தனது சகோதரர்கள் மற்றும் உறவினர்களுடன் வீட்டுக்கு வந்ததாக குடும்பத்தினர் கூறுகின்றனர். அதன் பின்னர் வினயுடன் அவர்கள் தகராறில் ஈடுபட்டதாகவும், அவரைத் தாக்கியதாகவும் தாயார் குற்றம்சாட்டியுள்ளார். வீட்டில் நடந்த சம்பவத்துக்குப் பிறகு வினயின் உடல்நிலை மோசமடைந்த நிலையில், அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால் அங்கு மருத்துவர்கள் அவர் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் போலீஸார் மற்றும் தடயவியல் குழுவினர் சம்பவ இடத்துக்கு சென்று ஆதாரங்களை சேகரித்தனர்.
இந்த வழக்கில் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்கள் தொடர்பாகவும் பல கேள்விகள் எழுந்துள்ளன. சம்பவத்துக்கு முன்பு வீட்டுக்குள் இருந்த சிசிடிவி கேமரா அணைக்கப்பட்டதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளதாக மற்றொரு செய்தி தெரிவிக்கிறது. இதனிடையே வினயின் மனைவி ரேகா, அவரது இரண்டு சகோதரர்கள் மற்றும் அவரது அண்ணி ஆகிய நான்கு பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். வீட்டுக்குள் உண்மையில் என்ன நடந்தது, ஒவ்வொருவரின் பங்கு என்ன, வினயின் மரணத்துக்கான சரியான காரணம் என்ன என்பதைக் கண்டறிய போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
