பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் உள்ள செயல்பட்டு வரும் பீட்சா கடைக்குள் மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செவ்வாய்க்கிழமை நள்ளிரவு 12.45 மணியளவில் இந்த சம்பவம் நடைபெற்றதாகக் கூறப்படுகிறது. கடைக்குள் இருந்தவர்களை அச்சுறுத்தும் வகையில் அடுத்தடுத்து 3 முறை துப்பாக்கியால் சுட்டுவிட்டு மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர். வெறும் 3 விநாடிகளில் 3 முறை துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், இந்தச் சம்பவத்தின் கண்காணிப்பு கேமரா காட்சிகள் தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

கண்காணிப்பு கேமரா பதிவில், இருவர் கடைக்குள் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தபோது தொப்பி அணிந்த இளைஞர் ஒருவர் மற்றொருவருடன் அங்கு நுழைவது பதிவாகியுள்ளது. பின்னர் அவர்கள் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தியதாகத் தெரிகிறது. இதனால் கடையில் இருந்த வாடிக்கையாளர்களும் ஊழியர்களும் பதற்றமடைந்து அங்கிருந்து வெளியே ஓடியுள்ளனர். அவர்களுடன் வந்திருந்த முகத்தை மறைத்த மற்றொரு நபரும் துப்பாக்கியைப் பயன்படுத்த முயன்றதாகவும், ஆனால் அது செயல்படாமல் போனதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

துப்பாக்கிச்சூட்டைத் தொடர்ந்து இரு மர்ம நபர்களும் கடையை விட்டு வெளியேறி, அங்கு காத்திருந்த மூன்றாவது நபருடன் இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்றுள்ளனர். இதனிடையே, ‘கோபி லஹோரியா குழு’ என்ற பெயரில் செயல்படும் இன்ஸ்டாகிராம் சமூக ஊடகக் கணக்கு இந்தத் தாக்குதலுக்கு பொறுப்பேற்றதாகக் கூறப்படுகிறது. இந்தக் கணக்கு வெளியிட்ட தகவலையும் காவல் துறையினர் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர். சம்பவம் தொடர்பான கண்காணிப்பு கேமரா பதிவுகளை கைப்பற்றி, தப்பிச் சென்றவர்களின் அடையாளங்களைக் கண்டறியும் பணியில் விசாரணைக் குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக  நகர் காவல் நிலையத்தில் அடையாளம் தெரியாத நபர்களுக்கு எதிராக பாரதிய நியாய சன்ஹிதாவின் தொடர்புடைய பிரிவுகளின் கீழும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. துப்பாக்கிச்சூட்டுக்கான காரணம் என்ன, இதில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா என்பது குறித்து காவல் துறையினர் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். சமூக ஊடகத்தில் வெளியான பொறுப்பேற்பு தகவலின் உண்மைத் தன்மையையும் அதிகாரிகள் சரிபார்த்து வருகின்றனர். குற்றவாளிகளை அடையாளம் கண்டு கைது செய்யும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.