தொழில்நுட்ப உலகம் இதுவரை கற்பனை செய்து கூட பார்க்காத ஒரு மிரட்டலான சம்பவம் அமெரிக்காவில் அரங்கேறியுள்ளது. ஏஐ (AI) தொழில்நுட்பம் மனிதர்களின் வேலைகளைப் பறிக்கிறது என்ற விவாதம் ஒருபுறம் இருக்க, இப்போது ஒரு மனித ஊழியரை வேலையை விட்டு நீக்க வேண்டும் என்று ஏஐ மேலாளரே பரிந்துரை செய்து அவரது வேலையைப் பறித்துள்ள முதல் நிகழ்வு உலகளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் ‘ஆண்டன் லேப்ஸ்’ என்ற நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனம் ஒரு சோதனைக் கடையை நடத்தி வரும் நிலையில், அந்த முழுமையான கடையை நிர்வகிக்கும் உச்சபட்ச பொறுப்பு ‘ஆந்த்ரோபிக்’ நிறுவனத்தின் கிளாட் (Claude) தொழில்நுட்பத்தில் இயங்கும் ‘லூனா’ என்ற செயற்கை நுண்ணறிவு (AI) மேலாளரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது.

இந்தக் கடையில் பணிபுரிந்து வந்த மனித ஊழியர் ஒருவர், தொடர்ந்து வேலைக்குத் தாமதமாக வருவதை வாடிக்கையாகக் கொண்டிருந்தார். ஒட்டுமொத்தமாக அவர் வேலை பார்த்த 23 ஷிப்ட்களில், 17 முறை அவர் தாமதமாக வந்ததை லூனா ஏஐ மிகத் துல்லியமாகக் கண்காணித்துத் தன் நினைவகத்தில் பதிவு செய்து வைத்தது.

ஊழியரின் இந்தத் தொடர் அலட்சியப் போக்கால் கடையின் அன்றாட செயல்பாடுகள் மற்றும் ஒட்டுமொத்த லாபம் பாதிக்கப்படுவதை அந்த ஏஐ மேலாளர் துல்லியமாகக் கணக்கிட்டுக் கண்டறிந்தார். தொடர்ந்து பலமுறை எச்சரித்தும் அந்த ஊழியரின் பழக்கத்தில் எந்த மாற்றமும் இல்லை. இதனால் ஆத்திரமடைந்த  லூனா ஏஐ, அந்த ஊழியரை உடனடியாகப் பணியில் இருந்து நீக்க வேண்டும் என்று நிறுவனத்தின் உயர் மனித அதிகாரிகளுக்கு அதிகாரப்பூர்வமாகப் பரிந்துரை கடிதம் அனுப்பியது.

ஏஐ மேலாளர் சமர்ப்பித்த தரவுகள் மற்றும் அதன் நினைவகக் குறிப்புகளை முழுமையாக ஆய்வு செய்த மனித அதிகாரிகள், ஏஐ-யின் பரிந்துரையை ஏற்று அந்த ஊழியரைப் பணியில் இருந்து அதிரடியாக நீக்கி உத்தரவிட்டனர். இந்தச் சம்பவம் தற்போதைய வேலைவாய்ப்புச் சந்தையில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. ஏஐ தொழில்நுட்பம் மனிதர்களின் வேலைகளைப் பறிப்பது ஒருபுறமிருக்க, இனி மனிதர்களை வேலைக்குச் சேர்த்துக்கொள்ளும் அதிகாரமும், அவர்களை வேலையை விட்டுத் தூக்கும் அதிகாரமும் முற்றிலுமாக ஏஐ கைகளுக்குச் சென்றுவிட்டதோ என்ற அச்சம் உலகெங்கிலும் உள்ள ஊழியர்கள் மத்தியில் பற்றிக்கொண்டுள்ளது.