தமிழகத்தில் தவெக ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் எதற்கெடுத்தாலும் கைது நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளதாகச் சாடியுள்ள சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், தற்போதைய அரசை ஒரு ‘பாசிச அரசு’ என மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார். திமுக வழக்கறிஞர் அணி கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர், ஆளுங்கட்சியின் அடாவடித் போக்குகளையும், கைது நடவடிக்கைகளையும் கடுமையாகக் கண்டித்து அனல் பறக்கும் கருத்துக்களைத் தெரிவித்தார். அவர் பேசியதாவது,

தவெக ஆட்சிக்கு வந்த பிறகு வழக்கறிஞர்களின் பணிதான் இப்போது மிக அவசியமானதாகவும், பிஸியாகவும் மாறியுள்ளது. தவெக ஆட்சியில் எதற்கெடுத்தாலும் கைது செய்யும் நிலைதான் தொடர்கிறது. நின்னா கைது, நடந்தா கைது, பேசினா கைது, சமூக வலைதளங்களில் ஒரு போஸ்ட் போட்டால் கூட கைது என ஒரு மோசமான பாசிச அரசாக இந்த அரசு செயல்பட்டு வருகிறது” என்று அவர் குற்றம் சாட்டினார்.

அரசுக்கு தற்காப்பு உணர்வும் பாதுகாப்பின்மையும் அதிகமாக இருப்பதால், “தூங்கி எழுந்ததும் இன்று யாரைக் கைது செய்ய வேண்டும் என்று டைம் டேபிள் போட்டு செயல்பட்டு வருகிறது இந்த அரசு” என்றார். மேலும், தேர்தலில் ஏற்பட்ட தோல்விக்குப் பிறகு எழுச்சியடைந்துள்ள ‘ஜென்-இசட்’ இளைஞர்களையும் குறிவைத்து அரசு கைது செய்து வருவதாகத் தெரிவித்தார். தவெக அரசு கைது நடவடிக்கைகளைத் தொடங்கியபோதே திமுக வழக்கறிஞர் அணி அதிரடியாகச் சட்டப்போராட்டம் நடத்தியதாகவும், இதன் மூலம் சோர்ந்து போயிருந்த கட்சியினர் மீண்டும் முழுவீச்சில் மீண்டு வந்துள்ளதாகவும் அவர் பெருமிதம் தெரிவித்தார்.

தற்போதைய அமைச்சர்களின் செயல்பாடு மற்றும் கோவை கல்லூரி மாணவர் அமுதனின் கொலை குறித்துப் பேசிய அவர்:  “சீட்டுக்கட்டில் 52-ம் ஜோக்கர்தான்… அடைமொழி வச்சு கூப்பிட்டாதான் அமைச்சர்கள் யார்ன்னே தெரியுது. யார் எந்தத் துறை அமைச்சர் என்பது அந்த முதல்வர்ச்சிருக்கே தெரியாது என்று கிண்டலடித்தார்.

கோவை கல்லூரி மாணவர் அமுதனின் கொலை குறித்துப் பேசிய அமைச்சர், “கோவை மாணவர் அமுதனின் கொலையைத் தவெக அமைச்சர் ‘கோஷ்டி பூசல்’ என்று திசை திருப்புகிறார். 10 பேருக்கும் 10 பேருக்கும் சண்டை நடந்தால் அது கோஷ்டி பூசல்; ஆனால், 10 பேர் சேர்ந்து ஒரே ஒரு பையனை அடித்துக் கொன்றால் அதற்குப் பெயர் கொலையாளித்தனம், கொலை! கொல்லப்பட்ட அந்த மாணவருக்கு திமுக நிச்சயம் நீதி வாங்கித் தரும்” என்று ஆவேசமாகத் தெரிவித்தார்.

தமது முந்தைய கைது நடவடிக்கை குறித்துக் குறிப்பிட்ட உதயநிதி, “டம்மி முதலமைச்சர், வெட்கங்கெட்ட அரசு, கேடுகெட்ட அரசு, எதற்கும் துப்பில்லை, தைரியம் இல்லை என பல விஷயங்களைச் சொன்னேன்; அப்போது என்னை எதற்காகவும் கைது செய்யவில்லை. ஆனால், இறுதியாக ‘காவிரியில் தண்ணீர் வர வேண்டும்’ எனச் சொன்னதற்காகவே என்னை உடனே கைது செய்தார்கள். நாங்கள் ஏதோ ஜாலியா ட்ரிப் போற மாதிரிதான் கைதுக்குச் சென்றோம்; ஆனால், அரசே செலவு செய்து எங்களுக்கு இலவசமாக ஒரு ‘ரோடு ஷோ’ நடத்தி காட்டியது” என்று நையாண்டியுடன் கூறினார்.