டென்னிஸ் உலகின் ஜாம்பவானும், 24 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றவருமான நோவக் ஜோகோவிச் சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடரில் யாரும் எதிர்பாராத விதமாக அதிர்ச்சித் தோல்வியைச் சந்தித்துள்ளார். ஆர்கென்டீனா வீரர் தியாகோ டிரான்டேவிடம் அவர் தோல்வியடைந்ததை விட, போட்டியில் அவர் உடல்நலமின்றித் திணறிய காட்சியும், மைதானத்திலேயே வாந்தி எடுத்த சம்பவமும் டென்னிஸ் உலகை உலுக்கியுள்ளது.

அதாவது விம்பிள்டன் அரையிறுதிப் போட்டிக்குப் பிறகு களமிறங்கிய ஜோகோவிச், சின்சினாட்டி ஓபன் தொடரின் தொடக்க ஆட்டத்தில் வழக்கம் போல தனது ஆதிக்கத்தைச் செலுத்தினார். முதல் செட்டை எளிதாக 6-2 என்ற கணக்கில் கைப்பற்றி மிரட்டினார். ஆனால், இரண்டாவது செட் தொடங்கியதும் போட்டியின் போக்கு முற்றிலும் மாறியது. கடும் வெயிலும், தாங்க முடியாத புழுக்கமும் மைதானத்தை வாட்டி வதைத்த நிலையில், உலகின் முன்னணி வீரரான ஜோகோவிச்சின் உடல்நிலை திடீரென மோசமடையத் தொடங்கியது.

ஓடிக்கொண்டே இருந்த அவரது வேகம் குறைந்தது; ஒரு கட்டத்தில் மைதானத்தில் முழங்காலிட்டுத் திணறியவர், மருத்துவ உதவியை நாடினார். உடற்பயிற்சியாளர் மற்றும் மருத்துவர் சிகிச்சை அளித்தபோது, அவர் டவலில் வாந்தி எடுத்த காட்சி ரசிகர்களைப் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. உடல்நலன் பெரிதும் பாதிக்கப்பட்ட போதிலும்,  ஜோகோவிச் சோர்வடையாமல் தொடர்ந்து போராடினார். உலகத் தரவரிசையில் 50-வது இடத்தில் உள்ள அர்ஜென்டினா வீரர் தியாகோ டிரான்டே, ஜோகோவிச்சின் இந்த உடல்சோர்வைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டார்.

 

 

View this post on Instagram

 

A post shared by Tennis (@tennischannel)

தளர்ந்துபோன ஜோகோவிச்சின் பலவீனத்தை நன்கு பயன்படுத்திய டிரான்டே, இரண்டாவது செட்டை 6-4 எனக் கைப்பற்றி போட்டியைச் சமன் செய்தார். தொடர்ந்து பரபரப்பான மூன்றாவது மற்றும் இறுதிச் செட்டிலும் தனது ஆதிக்கத்தைச் செலுத்திய அவர், மீண்டும் 6-4 என்ற கணக்கில் வென்று தனது டென்னிஸ் வாழ்க்கையின் மிகச்சிறந்த மற்றும் மறக்க முடியாத வரலாற்று வெற்றியைப் பதிவு செய்தார்.

போட்டிக்குப் பிறகு பேசிய ஜோகோவிச், தனக்குக் கடந்த சில ஆண்டுகளாகவே கடுமையான வெப்பம் மற்றும் புழுக்கமான சூழலில் விளையாடும்போது இதுபோன்ற உடல்நலப் பிரச்சினை ஏற்படுவதாகத் தெரிவித்தார். நரம்பு மண்டல பாதிப்பு மற்றும் உடல்நிலை சார்ந்த இந்தச் சிக்கல் தன்னைச் சோதிப்பதாக அவர் குறிப்பிட்டது ரசிகர்களைக் கவலையில் ஆழ்த்தியுள்ளது. மேலும் வரவிருக்கும் யூஎஸ் ஓபன்  தொடரில் தனது வரலாற்றுச் சிறப்புமிக்க 25-வது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தைக் குறிக்கோளாகக் கொண்டுள்ள ஜோகோவிச்சிற்கு, இந்தச் உடல்நலக் குறைவு பெரும் சவாலாக மாறியுள்ளது.