சிங்கப்பூரில் உள்ள பிரபல காபி கடை ஒன்றில், சிறுமி ஒருவரின் தலையில் பாசமாகத் தட்டிய 70 வயது முதியவரை, ஆத்திரமடைந்த நபர் ஒருவர் பலமாகத் தள்ளி கீழே விழச் செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி கடும் அதிர்வலைகளைத் ஏற்படுத்தியுள்ளன.
சிங்கப்பூரின் ஈஸ்ட் கோஸ்ட் பகுதியில் உள்ள ஒரு காபி கடையில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. பாதிக்கப்பட்ட முதியவருக்கு எழுபது வயது ஆகிறது; நடக்கக் சிரமப்படும் இவர், அங்குள்ள உணவகம் ஒன்றில் தனது குடும்பத்திற்கு உதவியாக வேலை பார்த்து வருகிறார்.
சம்பவத்தன்று, முதியவர் காபி கடை மேசைகளை பிடித்தபடியே மெதுவாக நடந்து சென்றுள்ளார். அப்போது அங்குள்ள மேசையில் அமர்ந்திருந்த சிறுமி ஒருவரின் தலையில் அவர் லேசாகத் தட்டியுள்ளார். உடனடியாக அங்கிருந்த ஒரு பெண், முதியவரின் கையைத் தட்டிவிட்டுள்ளார். சற்று முன்பு அங்கிருந்து நகர்ந்திருந்த நபர் ஒருவர், திடீரென வேகமாகத் திரும்பி வந்து முதியவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். சிசிடிவி காட்சிகளின்படி, அந்த நபர் ஆத்திரத்தில் முதியவரை பலமாகத் தள்ள, அவர் நிலை தடுமாறி தரையில் பலத்த காயத்துடன் விழுந்துள்ளார்.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட முதியவரின் மகனும் உணவக உரிமையாளருமான நபர் பேஸ்புக் பக்கம் மூலம் ஆகஸ்ட் 15 அன்று மாலை இந்தத் தகவலைப் பகிர்ந்துள்ளார். அந்தப் பதிவில், முதியவரைத் தள்ளிய நபர் பின்னர் அவரிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு ஒரு குளிர்பானத்தை வழங்கியதாகக் கூறப்பட்டுள்ளது. இருப்பினும், வயதான காலத்தில் ஏற்பட்ட இந்த திடீர் வீழ்ச்சியால் அந்த முதியவர் கடுமையான முதுகுவலியால் அவதிப்பட்டு வருவதாக அவரது மகன் வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார். மேலும், அந்த நபரை அடையாளம் காண பொதுமக்களின் உதவியையும் அவர் நாடியிருந்தார்.
ELDERLY SINGAPORE MAN in his 70s uses TABLES to HELP HIM WALK — ‘HISTORY of LEG and HIP INJURIES’
‘PATS’ YOUNG GIRL while passing by
FURIOUS FATHER SLAMS him to the ground — INJURED
FATHER ‘APOLOGIZES’ and OFFERS MAN a DRINK — DOES THAT MAKE UP for IT? pic.twitter.com/ZLFoL6XWPV
— RT (@RT_com) August 15, 2026
சமூக வலைதளங்களில் இந்தச் சிசிடிவி வீடியோ வைரலாகி தீயாய் பரவியதை அடுத்து, பொதுமக்களிடையே கடும் கோபமும் கண்டனங்களும் எழுந்துள்ளன. இதுகுறித்துத் தகவலறிந்த சிங்கப்பூர் காவல்துறையினர், ஆகஸ்ட் 16 அன்று வெளியிட்ட ஊடக பதிலில், சம்பவம் தொடர்பாக அதிகாரப்பூர்வமாகப் புகார் பெறப்பட்டுள்ளதாகவும், உடனடியாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு தீவிர விசாரணை நடந்து வருவதாகவும் உறுதிப்படுத்தியுள்ளனர். மோதலுக்கான முழுமையான காரணங்கள் மற்றும் முதியவரைத் தள்ளிய நபரின் பின்னணி குறித்து அதிகாரிகள் தீவிரமாக ஆராய்ந்து வருகின்றனர்.
