உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் ரேபிடோ பைக் டாக்ஸியில் பயணித்த 17 வயது சிறுவன் ஒருவன், ஓட்டுநரால் பாலியல் அத்துமீறலுக்கு உள்ளாக்கப்பட்டதாகக் கூறி வெளியிட்டுள்ள வீடியோ இணையத்தில் பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

பைக் பயணம் நடைபெற்றுக் கொண்டிருந்த போதே, பின்னால் அமர்ந்திருந்த சிறுவனிடம் ஓட்டுநர் தவறாக நடந்து கொள்ள முயன்ற காட்சிகள் சிறுவனின் மொபைல் கேமராவில் பதிவாகியுள்ளன. தனக்கு நேர்ந்த இந்த அநீதியைத் துணிச்சலுடன் வீடியோவாகப் பதிவு செய்து சமூக வலைதளங்களில் சிறுவன் வெளியிட்டதை அடுத்து, அந்த வீடியோ பரவிப் பொதுமக்களிடையே பெரும் கண்டனக் குரல்களை எழுப்பியுள்ளது.

இந்த அதிர்ச்சிச் சம்பவம் தொடர்பாகப் பாதிக்கப்பட்ட சிறுவன் ஆன்லைனில் புகார் அளித்ததைத் தொடர்ந்து, ரேபிடோ நிறுவனம் உடனடியாகப் பதிலளித்துள்ளது. வாடிக்கையாளர்களின் பாதுகாப்பில் இத்தகைய அத்துமீறல்களை ஒருபோதும் சகித்துக் கொள்ள முடியாது என்றும், சம்பந்தப்பட்ட பைக் ஓட்டுநரைத் தங்களது செயலியில் இருந்து நிரந்தரமாக நீக்கி நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அந்நிறுவனம் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.

எனினும், சட்டப்பூர்வமான கடுமையான காவல்துறை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதற்கான தெளிவான ஆதாரங்கள் உடனடியாகத் தெரிவிக்கப்படவில்லை என்றும் சிறுவன் ஆதங்கத்தைப் பகிர்ந்துள்ளான். செயலி வழிப் போக்குவரத்துச் சேவைகளில் பயணிகளின் பாதுகாப்பு என்பது எந்த அளவிற்கு கேள்விக்குறியாக உள்ளது என்பதை இந்தச் சம்பவம் மீண்டும் ஒருமுறை தோலுரித்துக் காட்டியுள்ளது.

பாலியல் துன்புறுத்தல்கள் மற்றும் அத்துமீறல்கள் என்பது பாலின பாகுபாடின்றி சிறுவர்கள் மற்றும் இளைஞர்களுக்கும் கூட நிகழக்கூடிய ஆபத்தாக மாறியுள்ளது என்பதை இச்சம்பவம் உணர்த்துகிறது. இதுபோன்ற சேவை நிறுவனங்கள் வெறும் ஓட்டுநர்களைப் பதிவிறக்கம் செய்வதோடு நிறுத்திவிடாமல், அவர்களின் பின்னணியைச் சரியாக ஆய்வு செய்து பயணிகளின் முழுமையான பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

“>