தெலுங்கானா மாநிலத்தில் பெய்த கனமழை காரணமாகப் போக்குவரத்துத் துண்டிக்கப்பட்ட தொலைதூரக் பழங்குடியினர் கிராமத்தைச் சேர்ந்த 7-மாத கர்ப்பிணிப் பெண் ஒருவர், ஆற்றில் பெருக்கெடுத்த வெள்ளத்தைக் கடக்கத் ‘டோலி’ எனப்படும் பாரம்பரியக் கட்டிலில் தூக்கிச் செல்லப்பட்ட நிகழ்வு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானா மாநிலம் கோலம் குடா என்ற பழங்குடியினக் குடியிருப்புப் பகுதியில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. இப்பகுதியில் பெய்த கனமழையால் அப்பகுதியில் உள்ள நீரோடைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகனங்கள் செல்லக்கூடிய சாலைகள் அனைத்தும் துண்டிக்கப்பட்டு, கிராமம் தனித்து விடப்பட்டது.
Telangana: Pregnant Woman Carried Across Raging Stream
In Komuram Bheem Asifabad district seven-month pregnant woman with severe stomach pain was carried on a stretcher across the flooded Peddavagu 2 men to reach a hospital. Villagers urge the government build bridges urgently pic.twitter.com/BHJdn3BxND
— Gummalla Lakshmana (@GUMMALLALAKSHM3) August 13, 2026
இந்தச் சூழலில், கோலம் குடா பகுதியைச் சேர்ந்த கோடபா ரமேஸ்வரி என்ற 7 மாத கர்ப்பிணிப் பெண்ணுக்கு அவசர மருத்துவ உதவி தேவைப்பட்டது. கிராமத்திற்குள் ஆம்புலன்ஸ் வர முடியாத சூழல் ஏற்பட்டதால், கர்ப்பிணியின் உயிரைக் காப்பாற்ற கிராம மக்கள் உடனடியாகக் களமிறங்கினர்.
உடனே கிராம மக்களும் அவரது குடும்பத்தினரும் சேர்ந்து, ‘டோலி’ எனப்படும் பாரம்பரிய மூங்கில் கட்டிலில் கர்ப்பிணியைப் படுக்க வைத்து, ஆபத்தான முறையில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ள நீரைத் தாண்டிச் சுமந்து சென்றனர். பல கிராம மக்கள் ஒன்றிணைந்து, விரைவாக ஓடும் வெள்ளநீரில் மிகுந்த எச்சரிக்கையுடன் போராடி ரமேஸ்வரியை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் முயற்சியில் இறங்கினர்.
கடும் சிரமத்திற்குப் பிறகு அவர்கள் ரமேஸ்வரியைக் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், கருவில் குழந்தியிடமிருந்து அசைவுகள் எதுவும் இல்லை என்று கவலைத் தெரிவித்து, மேல் சிகிச்சைக்காக ஆசிபாபாத் அரசு மருத்துவமனைக்கு உடனடியாக அனுப்பி வைத்தனர்.
பருவமழைக் காலங்களில் தொலைதூரப் பழங்குடியினர் கிராம மக்கள் சந்திக்கும் மருத்துவ உதவி பெறும் சவால்களை இந்தச் சம்பவம் மீண்டும் ஒருமுறை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது. எவ்விதப் பாலங்களும், முறையான சாலை இணைப்புகளும் இல்லாததால், இதுபோன்ற அவசர காலங்களில் மக்கள் பாரம்பரிய முறைகளையே நம்பியிருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. பருவமழை காலங்களில் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு மருத்துவமனைக்குச் செல்லும் இந்த அவல நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்க அரசு உடனடியாக அனைத்துச் சாலைகளையும், நிரந்தரப் பாலங்களையும் அமைத்துக் கொடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
