உத்தரப் பிரதேச மாநிலத்தில் அமைந்துள்ள கணபதி கோவிலில், கடந்த 20 நாட்களாகக் காணாமல் போயிருந்த அங்கித் மற்றும் இஸ்ரார் ஆகிய இரு நெருங்கிய நண்பர்கள் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுப் புதைக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அங்கித் இந்து சமூகத்தைச் சேர்ந்தவராகவும், இஸ்ரார் முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்தவராகவும் இருந்தபோதிலும், இருவரும் மிக நெருங்கிய நண்பர்களாகப் பழகி வந்தனர்.
சுமார் 20 நாட்களுக்கு முன்பு வீட்டை விட்டுச் சென்ற இவர்கள் இருவரும் மீண்டும் திரும்பவில்லை. அவர்களைத் தேடி வந்த உறவினர்களுக்கு, லஹ்சௌடா கோவிலைச் சேர்ந்த பூசாரியைச் சந்திக்க அவர்கள் சென்றதாகத் தெரியவந்தது. இதன்பின்னர் கோவில் வளாகத்தில் நடத்தப்பட்டத் தேடுதலில், இருவரின் உடல்களும் கோவிலுக்குள் புதைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, காவல்துறையினரால் தோண்டி எடுக்கப்பட்டது.
கொலை செய்யப்பட்ட உடல்கள் கோவில் வளாகத்தில் உள்ள தூணிக் கட்டமைப்புக்குக் கீழே குழி தோண்டிப் புதைக்கப்பட்டு, யாருக்கும் சந்தேகம் வராதபடி அதன்மேல் தரையோடுகள் (இன்டர்லாக்கிங் டைல்ஸ்) பதித்து மூடப்பட்டிருந்தன. இந்தச் கொடூரச் செயலைச் செய்ததாகக் கோவில் பூசாரி மீது உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் கடுமையான குற்றச்சாட்டைச் சுமத்தியுள்ளனர்.
காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில், குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணுடன் இருந்த ஒழுக்கமற்ற உறவின் காரணமாகவே இந்தக் கொலை நடந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. சம்பவத்திற்குப் பிறகு தலைமறைவாக உள்ள கோவில் பூசாரியைத் தீவிரமாகத் தேடி வரும் காவல்துறையினர், இந்தக் கொலையில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு இருக்கிறது என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
20 நாட்களாகத் தேடப்பட்டு வந்த இந்து மற்றும் முஸ்லிம் நண்பர்கள் இருவர் கோவிலுக்குள்ளேயே கொலை செய்யப்பட்டுப் புதைக்கப்பட்ட இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. தலைமறைவாக இருக்கும் பூசாரியை உடனே கைது செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
