தமிழ் திரையுலகில் தனக்கென ஒரு தனித்துவமான கதைகளைத் தேர்ந்தெடுத்து, எதார்த்தமான நடிப்பால் ரசிகர்களின் மனதைக் கவர்ந்து வரும் இளம் கதாநாயகர்களில் ஒருவர் அசோக் செல்வன். புதுமுக இயக்குநர்களுக்கு வாய்ப்பளிப்பதும், அதே சமயம் அழுத்தமான காதல் கதைகளில் நடித்துக் ரசிகர்களைக் கட்டுப்போடுவதும் இவரது பாணி.
அந்த வகையில், அறிமுக இயக்குநர் கார்த்திகேயன் ராமகிருஷ்ணன் இயக்கத்தில், கோவிந்த் வசந்தா இசையமைப்பில் அசோக் செல்வன் மற்றும் பிரீத்தி முகுந்தன் இணைந்து நடித்துள்ள ‘அன்பில் அவன்’ திரைப்படத்தின் டீசர் மற்றும் தலைப்பு வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது.
வழக்கமாக சினிமா விழாக்கள் என்றாலே முறைப்படியான பேச்சுகளும், செயற்கையான பாராட்டுகளும் நிறைந்திருக்கும் சூழலில், இந்த விழாவோ அசோக் செல்வன் மற்றும் பிரீத்தி முகுந்தன் ஆகிய இருவரின் கலகலப்பான உரையாடல்களால் அரங்கம் முழுவதும் சிரிப்பலைகளை அள்ளியது.
திரையில் மட்டுமல்லாமல் நிஜ வாழ்விலும் தங்களுக்குள் இருக்கும் நெருங்கிய நட்பைப் பற்றிப் பகிர்ந்த அசோக் செல்வன், படப்பிடிப்பு தளத்தில் நடந்த சுவாரசியமான சம்பவங்களைக் கூறி அங்கிருந்தவர்களை வியப்பில் ஆழ்த்தினார்.
பிரீத்தி முகுந்தனைப் பற்றிப் பேசும்போது, “பிரீத்தி எப்போதும் செல்போனிலேயே மூழ்கியிருக்கும் ரகம், அவரிடமிருந்து தொழில்நுட்பம் குறித்து நான் நிறையக் கற்றுக்கொண்டேன், சாட் ஜிபிடி கூட அவர்தான் எனக்குக் கற்றுக்கொடுத்தார்” என்று கூறிய அசோக் செல்வன், தன் இன்ஸ்டாகிராம் கணக்கில் நடந்த சம்பவத்தையும் நகைச்சுவையாகப் பகிர்ந்துகொண்டார்.
மேலும் தன் இன்ஸ்டாகிராம் ப்ரொஃபைலைப் பார்த்த பிரீத்தி, “ச்சீ… இதெல்லாம் ஒரு ப்ரொஃபைலா? நீயெல்லாம் ஒரு ஆக்டரா? உனக்கெல்லாம் இன்ஸ்டாகிராம் தேவையா?” என்று கிண்டலடித்து, தன் போனில் இருந்த பல பதிவுகளைத் தானே முன்வந்து டெலிட் செய்யத் தொடங்கிவிட்டார் என்று அசோக் செல்வன் ஜாலியாகக் கூறி அரங்கத்தை அதிர வைத்தார்.
அசோக் செல்வனின் இந்த ஜாலியான குற்றச்சாட்டிற்குப் பதிலளிக்கும் வகையில் பேசிய நடிகை பிரீத்தி முகுந்தனும் தன் பங்கிற்கு அசோக் செல்வனை சுவாரசியமாகக் கலாய்த்தார். அசோக் செல்வன் படப்பிடிப்பு தளத்திற்கு ஒரு நாள் மிகவும் சூப்பராக வருவார், மறுநாள் ஏனோதானோவென்று வருவார் என்று கூறிய பிரீத்தி, நடிகராக இருக்கும்போது அசோக் மிகவும் ஜாலியான மனிதராக இருப்பார் என்றும், அதே சமயம் தயாரிப்பாளராக மாறும்போது மிகவும் சீரியஸாகி விடுவார் என்றும் குறிப்பிட்டார்.
இப்படி அனிச்சையாக அவ்வப்போது ‘அந்நியன்’ படம் போல மாறிக்கொண்டே இருக்கும் அசோக் செல்வனின் இந்த இரண்டு பரிமாணங்களையும் மேடையில் பிரீத்தி சுட்டிக்காட்டிய விதம் ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்தது. கதாநாயகன் மற்றும் கதாநாயகிக்கு இடையே இருக்கும் இந்த இயல்பான புரிதலும் நகைச்சுவை உணர்வும், ‘அன்பில் அவன்’ படத்தில் இவர்களின் வேதியியல் எந்தளவிற்குச் சிறப்பாக வந்திருக்கும் என்ற எதிர்பார்ப்பை திரையுலகினரிடையே அதிகரித்துள்ளது.
