இன்றைய டிஜிட்டல் காலத்தில் செல்போன் மற்றும் டிவி போன்ற தொழில்நுட்ப சாதனங்களால் பெற்றோர்களுக்கும் குழந்தைகளுக்கும் இடையேயான பிணைப்பு குறைந்து வருகிறது. இதனால் குழந்தைகள் பாதுகாப்பற்ற உணர்வைச் சந்திக்க நேரிடுகிறது. இந்தச் சிக்கலுக்குத் தீர்வாகவும், குழந்தைகளின் மனவளர்ச்சியை அதிகரிக்கவும் மருத்துவ நிபுணர்கள் ’10+10+10′ என்ற எளிய விதியைப் பரிந்துரைக்கின்றனர்.

இந்த விதியின்படி, பெற்றோர் தினமும் எந்தவொரு கவனச்சிதறலும் இல்லாமல் 30 நிமிடங்களை முழுக்க முழுக்கக் குழந்தைகளுக்காகச் செலவிட வேண்டும். இதில் முதல் 10 நிமிடங்கள், குழந்தை காலையில் எழுந்தவுடன் செலவிடப்பட வேண்டும். காலையில் தொடங்கும் இந்த நேர்மறையான கவனிப்பு, அன்றைய நாள் முழுவதையும் குழந்தை அமைதியாகவும் மகிழ்ச்சியாகவும் கடக்க வழிவகுக்கிறது.

அடுத்த 10 நிமிடங்கள், குழந்தைகள் பள்ளி முடிந்து வீடு திரும்பும் நேரத்திலோ அல்லது அவர்களுக்குப் பெற்றோரின் ஆறுதலும் ஆதரவும் அதிகம் தேவைப்படும் தருணத்திலோ செலவிடப்பட வேண்டும். அன்றாடச் சவால்களைச் சந்தித்து வரும் குழந்தைகளுக்கு இந்த நேரத்தில் கிடைக்கும் கவனிப்பு, அவர்களுக்குப் பெரிய மன வலிமையையும் நம்பிக்கையையும் தருகிறது.

இறுதி 10 நிமிடங்கள், குழந்தைகள் இரவில் தூங்குவதற்கு முன் ஒதுக்கப்படுகிறது. இந்த நேரத்தில் குழந்தைகளுக்குக் கதைகள் சொல்வது, அவர்களை அரவணைப்பது அல்லது அவர்களின் அன்றைய நாள் அனுபவங்களைக் கேட்டறிவது போன்றவற்றைச் செய்யலாம். இது குழந்தைகளின் மனதை அமைதிப்படுத்தி, இரவில் நிம்மதியான தூக்கத்தைப் பெற உதவுகிறது.

இந்த 30 நிமிடப் பயிற்சியின் போது பெற்றோர்கள் மொபைல் போன் பார்ப்பதைத் தவிர்த்து, குழந்தைகளுடன் நேரடி கண் தொடர்பு கொள்வது மிகவும் அவசியமாகும். பெற்றோர் தங்களின் முழு கவனத்தையும் அன்பையும் வழங்கும் போது, குழந்தைகள் தங்களை சுயமதிப்புமிக்கவர்களாக உணர்வதுடன் மனரீதியாகத் தைரியமானவர்களாகவும் புத்திசாலிகளாகவும் வளர்வார்கள்.