செயற்கைக் கருத்தரித்தல்  முறையில் குழந்தை பெற்றுக் கொண்ட பல தாய்மார்களுக்கு, ‘தங்களால் இயல்பாகத் தாய்ப்பால் கொடுக்க முடியுமா, சிகிச்சையின் போது எடுத்துக்கொண்ட ஹார்மோன் மருந்துகள் பால் உற்பத்தியைப் பாதிக்குமா’ என்ற அச்சமும் சந்தேகமும் எழுவது இயற்கை. ஆனால், இந்த பயத்திற்கு எந்தவிதமான அறிவியல் ஆதாரமும் இல்லை என்றும், IVF சிகிச்சைக்கும் தாய்ப்பால் சுரப்பிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும் மருத்துவ நிபுணர்கள் தெளிவாகக் கூறுகிறார்கள்.

IVF சிகிச்சையின் போது பெண்களுக்குச் சில ஹார்மோன் மருந்துகள் வழங்கப்பட்டாலும், அவை கர்ப்பத்தின் ஆரம்ப கட்டங்களோடு படிப்படியாக நிறுத்தப்பட்டு விடுகின்றன. பிரசவத்திற்குப் பிறகு தாய்ப்பால் சுரப்பது உடலின் இயற்கையான ஹார்மோன்களை மட்டுமே சார்ந்துள்ளது. பிரசவம் முடிந்தவுடன் உடலில் புரோலாக்டின் மற்றும் ஆக்ஸிடோசின் ஆகிய ஹார்மோன்கள் சுரந்து, பால் உற்பத்தியையும் சுரப்பையும் தூண்டுகின்றன. இந்த இயற்கைச் செயல்முறை சாதாரண கர்ப்பத்திற்கும் IVF கர்ப்பத்திற்கும் ஒரே மாதிரியாகத் தான் நடக்கிறது.

இயற்கையான பிரசவமாக இருந்தாலும் சரி, IVF பிரசவமாக இருந்தாலும் சரி, தாய்ப்பால் கொடுப்பதன் வெற்றி என்பது பிரசவத்திற்குப் பின் தாயும் குழந்தையும் பெறும் கவனிப்பிலேயே உள்ளது. குழந்தை பிறந்த முதல் ஒரு மணி நேரத்திற்குள் தாய்ப்பால் கொடுக்கத் தொடங்குவது, தாயும் குழந்தையும் ஒன்றாக இருப்பது, அடிக்கடி பாலூட்டுவது ஆகியவை வெற்றிகரமான தாய்ப்பாலூட்டலுக்கு மிகவும் முக்கியமானவை ஆகும்.

IVF மூலம் குழந்தை பெற்ற சில பெண்களுக்குத் தாய்ப்பால் சுரப்பதில் லேசான தாமதம் அல்லது சிரமம் ஏற்படலாம். ஆனால் அதற்கு IVF காரணம் அல்ல; தாயின் அதிக வயது, சிசேரியன் பிரசவம், இரட்டைக் குழந்தைகள், பிரசவத்திற்கு முந்தைய நீரிழிவு நோய் அல்லது உயர் ரத்த அழுத்தம் போன்ற காரணங்களே ஆகும். முதல் ஆறு மாதங்களுக்குக் குழந்தைக்குத் தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு  வலியுறுத்துகிறது. இது குழந்தையின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிப்பதோடு, தாயின் ஆரோக்கியத்திற்கும் பெரிதும் உதவுகிறது.

எனவே, IVF முறையில் கர்ப்பம் தரித்த பெண்கள் எந்தவித பயமும் கொள்ளத் தேவையில்லை. கர்ப்ப காலத்திலேயே மருத்துவர் அல்லது பாலூட்டும் ஆலோசகரிடம்  தாய்ப்பால் கொடுப்பது குறித்துத் தெளிவான வழிகாட்டுதல்களைப் பெற்றுக் கொள்ளலாம். பால் சுரப்பில் ஏதேனும் சிரமம் இருந்தால், ஆரம்பத்திலேயே நிபுணர்களின் ஆலோசனையைப் பெற்று அதை எளிதாகச் சரிசெய்து கொள்ள முடியும்.