கிரிக்கெட் மைதானங்கள் என்றாலே சிக்சர்களும் பவுண்டரிகளும் மட்டுமல்லாமல், சில நேரங்களில் வீரர்களுக்கு இடையே நடக்கும் அனல் பறக்கும் வார்த்தைப் போர்களும் ரசிகர்களை ஒருகணம் உறைந்துபோகச் செய்வதுண்டு. ஐபிஎல் தொடரில் விராட் கோலிக்கும் நவீன் உல் ஹக்கிற்கும் இடையே நடந்த புகழ்பெற்ற மோதலை கிரிக்கெட் ரசிகர்கள் யாரும் எளிதில் மறந்திருக்க முடியாது. அதேபோன்ற ஒரு சம்பவம் தற்போது அசாம் பிரீமியர் லீக் 2026 தொடரில் அரங்கேறி கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அசாம் பிரீமியர் லீக் தொடரில் திப்ருகர் வாரியர்ஸ் மற்றும் ஜோர்ஹாட் ஸ்டாலியன்ஸ் அணிகளுக்கு இடையேயான லீக் போட்டி நடைபெற்றது. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த குறைந்த ஸ்கோர் கொண்ட ஆட்டத்தின் கடைசி தருணத்தில்தான் அந்த எதிர்பாராத திருப்பம் நிகழ்ந்தது. ஜோர்ஹாட் அணி நிர்ணயிக்கப்பட்ட ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 132 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. எளிய இலக்கை நோக்கி ஆடிய திப்ருகர் அணி 17.4 ஓவர்களிலேயே இலக்கை எட்டி அபார வெற்றியைப் பதிவு செய்தது. திப்ருகர் அணியின் பேட்ஸ்மேன் சாஹில் ஜெயின் அணியின் வெற்றி ஷாட்டை அடித்து ஆட்டத்தை நிறைவு செய்தார்.
View this post on Instagram
ஆனால், வெற்றிப் புன்னகையுடன் இருக்க வேண்டிய மைதானம் திடீரென போர்க்களமானது. சாஹில் ஜெயின் வெற்றி ஷாட்டை அடித்தவுடன், ஜோர்ஹாட் ஸ்டாலியன்ஸ் அணியின் கேப்டன் சுவரூபம் புர்காயஸ்தா அவரிடம் ஏதோ கூற, நிலைமை முற்றிலுமாக மாறியது. கேப்டன் பேசியதைக் கேட்டு ஆத்திரமடைந்த சாஹில் ஜெயின், கோபத்துடன் தனது பேட்டைத் தூக்கிக் காட்டியபடியே கேப்டன் சுவரூபத்தை நோக்கி ஆக்ரோஷமாகச் சென்றார். இதனால் இரு தரப்பு வீரர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் வெடித்தது. சக வீரர்கள் உடனடியாக ஓடி வந்து தடுத்துப் பார்த்தும் அவர்களது ஆத்திரம் அடங்கவில்லை.
போட்டி முடிந்த பிறகு வழக்கம் போல இரு அணி வீரர்களும் ஒருவருக்கொருவர் கை குலுக்கிக் கொள்வது நடைபெறும். அப்போதும் இந்தத் தகராறு ஓயவில்லை. ஜோர்ஹாட் அணியின் மற்றொரு வீரரும் திப்ருகர் வீரர்களுடன் ஆக்ரோஷமான முறையில் மோதலில் ஈடுபட்டார்.
நிலைமை கைமீறிப் போவதைக் கண்ட திப்ருகர் அணியின் பயிற்சியாளர்கள் மற்றும் சப்போர்ட் ஸ்டாஃப் உடனடியாக களத்தில் இறங்கி அந்த வீரரை வலுக்கட்டாயமாக விலக்கி அழைத்துச் சென்றனர். ஜோர்ஹாட் கேப்டன் சுவரூபத்தை அவரது அணியினரும் பயிற்சியாளர்களும் நீண்ட நேரம் சமாதானப்படுத்த முயன்ற போதிலும், அவர் நீண்ட நேரம் கடும் கோபத்துடனேயே காணப்பட்டார். இந்தச் சண்டைக் காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் காட்டுத் தீ போல பரவி பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த ஆட்டத்தில் ஜோர்ஹாட் அணியை வீழ்த்தி திப்ருகர் வாரியர்ஸ் வெற்றி பெற முக்கியக் காரணமாக இருந்தவர் சாஹில் ஜெயின் தான். அவர் 38 பந்துகளில் 4 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்சர்களுடன் ஆட்டமிழக்காமல் 53 ரன்கள் குவித்து தனது அணியை வெற்றியின் பாதைக்கு அழைத்துச் சென்றது குறிப்பிடத்தக்கது.
