சிதம்பரம் அருகே உள்ள சி.மானம்பட்டியில் அமைந்துள்ள வெற்றிவேல் முருகன் திருக்கோவில் மிகவும் புகழ்பெற்ற ஆன்மீகத் தலமாகும். பல ஆண்டுகளுக்கு முன்பு இறை நம்பிக்கை இல்லாமல் இருந்த ஒருவர், கடுமையான நோயால் பாதிக்கப்பட்டு மரணத்தின் விளிம்பிற்குச் சென்றார். மருத்துவர்களாலும் குணப்படுத்த முடியாத நிலையில், அவருக்கு மயில் மீது முருகன் காட்சி தந்ததாக உணர்ந்தார். அதன்பின் அவர் முற்றிலும் குணமடைந்து, தாம் கண்ட அதே வடிவில் முருகனுக்குச் சிலை வடித்து கோயில் எழுப்பினார். அவரே இங்கு வெற்றிவேல் முருகனாக அருள்பாலிக்கிறார்.
இக்கோவிலில் திருமணத்தடை நீங்குவதற்காக ‘வெற்றிலை துடைப்பு’ என்னும் விசேஷ சடங்கு நடத்தப்படுகிறது. பக்தர்கள் கொடிமரம் அருகில் அமரவைக்கப்பட்டு, சுவாமிக்கு பூஜித்த வெற்றிலையில் அபிஷேக தீர்த்தம் தெளித்து முகத்தைத் துடைக்கச் செய்கின்றனர். மங்கலப் பொருளான வெற்றிலையால் முகத்தைத் துடைக்கும் போது கெட்ட சக்திகள் விலகி, திருமண பாக்கியம் விரைவில் கைக்கூடும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.
குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் வெற்றிவேல் முருகனுக்கு மூன்று மஞ்சள் மற்றும் எலுமிச்சை வைத்து வணங்குகின்றனர். பின்னர் அந்த எலுமிச்சை சாற்றைத் தம்பதியர் அருந்த வேண்டும். பூஜித்த மஞ்சளைப் பெண் தினமும் தேய்த்துக் குளித்து வந்தால் விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது. மேலும், நீண்ட நாள் நோயால் அவதிப்படுபவர்கள் மற்றும் வாய் பேச முடியாத குழந்தைகளுக்கு இங்கு தரப்படும் பூஜித்த மிளகு பிரசாதம் சிறந்த மருந்தாக விளங்குகிறது.
வங்காள விரிகுடா கடலைப் பார்த்தவாறு, வள்ளி மற்றும் தெய்வானை இல்லாமல் மயில் மீது அமர்ந்து வலது கையால் ஆசீர்வதிக்கும் கோலத்தில் சுவாமி காட்சி தருகிறார். வைகாசி விசாகம், கிருத்திகை, தைப்பூசம் மற்றும் பங்குனி உத்திரம் போன்ற விழாக்கள் இங்கு விசேஷமாகக் கொண்டாடப்படுகின்றன. ஒருமுறை பங்குனி உத்திர விழாவின் போது பக்தர் அளித்த தேங்காயை உடைத்தபோது அதில் அதி பிளவுகள் இருந்தன; அந்த அதிசயத் தேங்காய் இன்றும் கோயிலில் பாதுகாக்கப்படுகிறது.
இத்தகைய அற்புதங்கள் நிறைந்த இக்கோவில் சிதம்பரத்தில் இருந்து பிச்சாவரம் செல்லும் வழியில் கிள்ளை என்ற ஊரிலிருந்து 1 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. சிதம்பரத்தில் இருந்து முடசலோடை செல்லும் பேருந்துகள் (எண்: 3, 3A, 35) வழியாகச் சென்று இந்தத் திருத்தலத்தை எளிதாக அடையலாம்.
