இந்திய வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் கடந்த சில மாதங்களாகவே பெட்ரோலில் எத்தனால் கலப்பது குறித்த விவாதங்களும், அதிர்வுகளும் ஓய்ந்தபாடில்லை. குறிப்பக E20 எனப்படும் 20 சதவீதம் எத்தனால் கலக்கப்பட்ட பெட்ரோல் பயன்பாட்டிற்கு வந்த பிறகு, வாகனங்களின் மைலேஜ் குறைகிறது என்றும் எஞ்சின் பாகங்கள் சீக்கிரமே பழுதாகிறது என்றும் பல்வேறு தரப்பிலிருந்தும் புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன.
இந்த நிலையில், வாகன ஓட்டிகளின் நீண்ட நாள் கோரிக்கைக்கு தீர்வு காணும் வகையில் மத்திய அரசு ஒரு மிக முக்கியமான அதிரடி திட்டத்தை கையில் எடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வரும் ஆகஸ்ட் 5-ஆம் தேதி முதல் எத்தனால் எந்தவிதத்திலும் கலக்கப்படாத, 100 சதவீதம் தூய்மையான ப்யூர் பெட்ரோலை (Unblended Petrol) சந்தையில் அறிமுகப்படுத்த அரசு திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.
100% தூய பெட்ரோலை விரும்புபவர்கள் மற்றும் தங்கள் வாகனத்தின் எஞ்சின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிப்பவர்கள் இதனை பயன்படுத்திக் கொள்ளலாம். இதன் சில்லறை விற்பனை விலை ஒரு லிட்டருக்கு சுமார் ₹125 ஆக நிர்ணயிக்கப்பட வாய்ப்புள்ளதாக எண்ணெய் நிறுவன வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதே நேரத்தில், தற்போது வழக்கத்தில் இருக்கும் E20 பெட்ரோல் விநியோகம் எந்தவித தடையுமின்றி தொடரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த E20 பெட்ரோலின் விலை ஒரு லிட்டருக்கு சுமார் ₹105 முதல் ₹110 வரை நீடிக்கும் என தெரிகிறது. இதனால் சாதாரண மக்கள் மற்றும் பட்ஜெட் வாகன ஓட்டிகள் வழக்கமான பெட்ரோலையும், கலப்படம் இல்லாத பிரீமியம் தரத்திலான எரிபொருளை விரும்புபவர்கள் சற்று கூடுதல் தொகையை செலுத்தி 100% ப்யூர் பெட்ரோலையும் தேர்வு செய்து கொள்ளும் வகையில் இரண்டு விதமான சாய்ஸ்கள் கிடைக்கவுள்ளன.
எரிபொருள் சந்தையில் நிலவும் கலப்படப் புகார்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பதும், வாகனங்களின் எஞ்சின் ஆயுட்காலத்தை பாதுகாக்கும் மாற்று வழியை வழங்குவதுமே இந்த புதிய முயற்சியின் முக்கிய நோக்கமாக பார்க்கப்படுகிறது. எத்தனால் கலக்கப்படாத பெட்ரோல் விநியோகம் மீண்டும் தொடங்கப்பட்டால், அது சொகுசு வாகன உரிமையாளர்கள் மற்றும் பழைய ரக வாகனங்களை வைத்திருப்பவர்களுக்கு மிகப்பெரிய நிவாரணமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.
இருப்பினும், இந்த திட்டம் எந்தெந்த நகரங்களில் முதற்கட்டமாக அமல்படுத்தப்படும், இதற்கான அதிகாரப்பூர்வ நடைமுறைகள் மற்றும் பங்குகளில் இதற்கான தனி கட்டமைப்புகள் எவ்வாறு ஏற்படுத்தப்படும் என்பது குறித்த தெளிவான அறிவிப்பை மத்திய பெட்ரோலிய அமைச்சகம் விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அரசின் இந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியான பிறகே, இதற்கான முழுமையான செயல்பாட்டு தேதியும் விலைப் பட்டியலும் இறுதியாக உறுதி செய்யப்படும்.
