தமிழ் சினிமாவில் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் கேபிஒய் பாலா. சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் நகைச்சுவை நடிகராக வலம் வந்தாலும், அதைவிட பலரும் இவரைப் பாராட்டுவதற்கு முக்கியக் காரணம் இவரின் சமூக சேவையே ஆகும். யாருக்கு, எப்போது உதவி தேவைப்பட்டாலும் யோசிக்காமல் உடனடியாக அந்த இடத்திற்கே சென்று தம்மால் இயன்ற உதவிகளைச் செய்து வருவது இவரது வழக்கமாகும்.
சமீபத்தில் கூட, அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டு உயிருக்குப் போராடிய ஒரு குழந்தையின் உயிரைக் காப்பாற்ற பல கோடி ரூபாய் தேவைப்பட்ட நிலையில், தீவிர முயற்சி மேற்கொண்டு அந்த ஊசிக்குத் தேவையான பணத்தை ஏற்பாடு செய்து குழந்தையின் உயிரைக் காப்பாற்றி பெரும் புகழ்பெற்றார்.
இந்த நிலையில், பாலா செய்த மற்றொரு நற்செயல் தற்போது இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது. பாலாவைச் சந்தித்த காவல் துறை அதிகாரி ஒருவர், “எங்கள் காவல் நிலையத்திற்கு அருகில் இரண்டு கால்களையும், ஒரு கையையும் இழந்த ஒரு நபர் வசித்து வருகிறார். அவருக்கு இயக்க எளிதான ரிமோட் கண்ட்ரோல் சக்கர நாற்காலி வாங்கித் தந்தால் மிகவும் உதவியாக இருக்கும். அதன் விலை ஒரு லட்சம் ரூபாய் வரை வருகிறது” என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
View this post on Instagram
போலீஸ் அதிகாரி தன் சொந்த தேவைக்காக எதையுமே கேட்காமல், தன் காவல் நிலையத்திற்கு அருகில் கஷ்டப்படும் ஒரு மாற்றுத்திறனாளி அண்ணனுக்காக உதவி கேட்டதை எண்ணி பாலா நெகிழ்ந்துபோனார். அடுத்த கணமே சிறிதும் தாமதிக்காமல், அந்த ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள ரிமோட் கண்ட்ரோல் சக்கர நாற்காலியை வாங்கிச் சென்று அந்த மாற்றுத்திறனாளி நபரிடம் நேரில் வழங்கினார்.
தன்னைக் தேடி வந்து, தான் கேட்ட மாற்றுத்திறனாளிக்கான உதவியை இவ்வளவு விரைவாகவும் மனதாரவும் செய்துமுடித்த பாலாவைக் கண்டு அந்தப் போலீஸ் அதிகாரி ஆனந்தக் கண்ணீருடன் கண்கலங்கினார். மேலும், தன் சொந்த நலனுக்காக எதையும் கேட்காமல், மற்றொருவருக்காக வந்து உதவி கேட்ட அந்த அதிகாரியைக் கௌரவிக்கும் விதமாக பாலாவும் அவருக்குச் சல்யூட் அடித்து மரியாதை செலுத்தினார். தனி மனிதராகப் பல சமூகப் பணிகளைத் தொடர்ந்து செய்துவரும் கேபிஒய் பாலாவின் இந்த எளிய மற்றும் பெரிய மனதை இணையவாசிகள் பலரும் பாராட்டி வைரலாக்கி வருகின்றனர்.
