பீகார் மாநிலம் கயா மாவட்டத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய மாற்றுத்திறனாளி கொலை வழக்கு வெறும் 24 மணி நேரத்திற்குள் காவல்துறையினரால் துப்புதுலக்கப்பட்டுள்ளது. அதாவது மாற்றுத்திறனாளி இராஜ்தேவ் பாரதி கொல்லப்பட்ட வழக்கில், அவரது மனைவியே தனது காதலனுடன் சேர்ந்து கொலை செய்தது விசாரணையில் அம்பலமாகியுள்ளது. இந்த வழக்கில் தொடர்புடைய நான்கு பேரை காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.
போலீசார் இதுகுறித்து கூறுகையில், இராஜ்தேவ் பாரதி படுகொலைக்குப் பின்னால் கள்ளக்காதல் விவகாரம் இருப்பது தெரியவந்துள்ளது. அதன்படி, உயிரிழந்தவரின் மனைவிக்கும், இராஜா ஆலம் என்ற இளைஞருக்கும் இடையே நீண்ட காலமாகத் தொடர்பில் இருந்து வந்துள்ளது. இந்த உறவுக்குத் தடையாக இருந்த கணவனை வழியிலிருந்து அகற்றவே இந்தக் கொலையை அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.
காவல்துறையின் விசாரணையில், தனது கணவனைக் கொலை செய்யுமாறு மனைவி தனது காதலனான இராஜா ஆலமைத் தூண்டியது தெரியவந்துள்ளது. அதனைத் தொடர்ந்து, இராஜா ஆலம் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து இராஜ்தேவ் பாரதியின் கழுத்தை நெரித்து கொடூரமாகக் கொலை செய்துள்ளார்.
கொலைக்குப் பிறகு குற்றவாளிகள் தடயங்களை மறைக்க முயன்றனர். இருப்பினும், காவல்துறையினர் அறிவியல் பூர்வமான விசாரணை, தொழில்நுட்ப ஆதாரங்கள் மற்றும் தீவிரக் கேள்விகள் மூலம் இந்தச் சம்பவத்தின் அனைத்து உண்மைகளையும் வெளிக்கொணர்ந்துள்ளனர். இதன் அடிப்படையில், ரோஹித் குமார், இராஜா ஆலம், முகமது முன்னா மற்றும் உயிரிழந்தவரின் மனைவி உள்ளிட்ட நான்கு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்
கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின் மூலம் பல முக்கியத் தகவல்கள் கிடைத்துள்ளன. அவற்றின் அடிப்படையில் தேடப்பட்டு வரும் மற்ற சந்தேக நபர்களை தனிப்படை போலீஸார் தீவிரத் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையே, உயிரிழந்தவரின் மனைவி மீது ஏற்கனவே மதுபான விற்பனை தொடர்பான வழக்குகள் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது. அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகக் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
