சமூக வலைத்தளங்களில் நாள்தோறும் புதிது புதிதாகப் பல வார்த்தைகள் டிரெண்டாவது வழக்கம். குறிப்பாக, 1997-ல் இருந்து  2012- ம் ஆண்டு வரை பிறந்த ‘ஜென்-ஜி’ தலைமுறையினர் பயன்படுத்தும் பிரத்யேக வார்த்தைகள்  இணையத்தில் பெரும் அலையை உருவாக்கி வருகின்றன. இந்நிலையில், சமீபத்தில் இந்திய நாடாளுமன்ற விவாதத்தின் போது இந்த ஜென்-ஜி வார்த்தைகள் குறிப்பிடப்பட்டதைத் தொடர்ந்து, தற்போது நாடு முழுவதும் ‘Clocked It’, ‘Delulu’, ‘FOMO’ போன்ற வார்த்தைகள் பேசுபொருளாக மாறியுள்ளன.

இணையத்தில் அதிகம் பயன்படுத்தப்படும் ‘Delulu’ (டெலூலு) என்ற வார்த்தை ‘Delusion’ (மாயை அல்லது கற்பனை உலகம்) என்ற ஆங்கில வார்த்தையிலிருந்து உருவாக்கப்பட்டது. நிஜ நிலையை ஏற்றுக்கொள்ளாமல், தன் விருப்பப்படியே எல்லாம் நடக்கும் என்று கற்பனை உலகிலேயே வாழ்வதைக் குறிக்க இளைஞர்கள் இந்த வார்த்தையைப் பயன்படுத்துகின்றனர். மேலும் “Delulu is the Solulu” (கற்பனையே ஒரு வகை தீர்வு) என்ற வாசகமும் சோஷியல் மீடியாவில் மிகவும் பிரபலம்.

அடுத்ததாக, ‘FOMO’ (ஃபோமோ) என்பதன் விரிவாக்கம் ‘Fear Of Missing Out’ என்பதாகும். அதாவது, மற்றவர்கள் செய்யும் கொண்டாட்டங்கள், நிகழ்ச்சிகள் அல்லது புதிய டிரெண்டுகளைத் தான் தவறவிட்டுவிடுவோமோ என்ற ஒருவித பதற்றத்தையே இது குறிக்கிறது. சமூக வலைத்தளங்களில் மற்றவர்களின் பதிவுகளைப் பார்த்து ஏங்கும் மனநிலையை விளக்க இந்த ‘FOMO’ என்ற வார்த்தை பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது.

அதேபோல, ‘Clocked It’ (க்ளாக்ட் இட்) என்ற சொல், ஒரு விஷயத்தை அல்லது ஒருவரின் உண்மைச் சுபாவத்தை சட்டென்று புரிந்துகொள்வது, அல்லது யாராவது மறைக்க நினைக்கும் பொய்/ரகசியத்தைக் கச்சிதமாகக் கண்டுபிடிப்பதை உணர்த்தப் பயன்படுகிறது. சோஷியல் மீடியாவில் மட்டுமல்லாமல் தற்போது பொது விவாதங்களிலும் இந்த Gen-Z வார்த்தைகள் ஊடுருவத் தொடங்கியிருப்பது, நவீன மொழியியலில் ஏற்பட்டுள்ள சுவாரசியமான மாற்றத்தைக் காட்டுகிறது.