ஹாலிவுட் திரையுலகின் பிரம்மாண்ட இயக்கத்தில் வெளியாகி உலகளவில் பெரும் வரவேற்பைப் பெற்ற ‘ஓபன்ஹைமர்’ திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது நடைபெற்ற ஒரு சங்கடமான, அதேவேளையில் சுவாரசியமான அனுபவத்தை பிரபல நடிகை ஃப்ளோரன்ஸ் பியூ சமீபத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார். பிரபல இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில், சிலியன் மரஃபி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்த இத்திரைப்படத்தில், ஜீன் டாட்லாக் என்ற முக்கிய கதாபாத்திரத்தில் ஃப்ளோரன்ஸ் பியூ நடித்திருந்தார்.
படத்தின் ஒரு முக்கியக் காட்சியின் போது நடைபெற்ற தொழில்நுட்பக் கோளாறு பற்றியத் தகவலை அவர் தற்போது வெளியிட்டுள்ளார். லண்டனில் நடைபெற்ற சிறப்பு கலந்துரையாடல் நிகழ்வு ஒன்றில் ஃப்ளோரன்ஸ் பியூ பேசுகையில், “படப்பிடிப்புத் தளத்தில் இதுவரை யாரும் அறியாத ஒரு சுவாரசிய சம்பவம் எங்களுக்கு நடந்தது. சிலியன் மரஃபி மற்றும் நான் பங்குபெற்ற அந்தரங்கமான நிர்வாணக் காட்சியைப் படமாக்கிக் கொண்டிருக்கும் போது, எதிர்பாராதவிதமாக கேமரா பழுதாகிவிட்டது.
நாங்கள் இருவரும் ஆடைகள் எதுவும் இன்றி இருந்த அந்தத் தருணத்தில் கேமரா பழுதானது மிகவும் சங்கடமான ஒரு சூழலை உருவாக்கியது” எனக் குறிப்பிட்டுள்ளார். அது ஒரு ‘மூடிய அறை’ படப்பிடிப்பு என்பதால், கேமராவை சரிசெய்யும் வரை இரு நடிகர்களும் தங்கள் உடலைக் கைகளால் மறைத்தபடி அதே நிலையில் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. மாற்று கேமராவும் பழுதுநீக்கும் மையத்தில் இருந்ததால், உடனடியாக வேறொரு கேமராவைப் பயன்படுத்த இயலவில்லை.
இதன்பின், பழுதைச் சரிசெய்ய ஒரு கேமரா தொழில்நுட்ப வல்லுநர் அந்த அறைக்குள் வரவழைக்கப்பட்டு கேமராவைச் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டார். அப்போது ஏற்பட்ட அசௌகரியமான அமைதியைத் தவிர்க்க எண்ணிய ஃப்ளோரன்ஸ் பியூ, அந்த நேரத்தையும் ஒரு கற்றல் வாய்ப்பாக மாற்றிக் கொண்டார்.
அவர் அந்தத் தொழில்நுட்ப வல்லுநரிடம், கேமராவின் ஷட்டரில் என்ன பிரச்சனை ஏற்பட்டது என்று ஆர்வம் பொங்கக் கேள்விகளைக் கேட்டுத் தெரிந்து கொண்டார். பின்னர் இயக்குநர் கிறிஸ்டோபர் நோலனும் அங்கு வந்து, கேமராவிற்குள் வெளிச்சம் தவறான வழியில் ஊடுருவியதால் தான் இந்தத் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது என்பதை அவருக்கு விளக்கியுள்ளார். படப்பிடிப்புத் தளத்தில் இருந்த அனைவரது தொழில்முறை அர்ப்பணிப்பையும் ஃப்ளோரன்ஸ் பியூ வெகுவாகப் பாராட்டியுள்ளார்.
