இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, 2027 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாடுவதை தனது வாழ்நாள் லட்சியமாகக் கொண்டுள்ளார். இதற்காக அவர் எடுத்து வரும் முயற்சிகள் கிரிக்கெட் வட்டாரத்தையே வியப்பில் ஆழ்த்தியுள்ளது. தனது உடற்தகுதியை மேம்படுத்துவதற்காக கடும் உடற்பயிற்சிகளை மேற்கொண்டு, சுமார் 11 கிலோ வரை எடையைக் குறைத்து அசத்தியுள்ளார். அத்தோடு, மைதானத்தில் தனது பேட்டிங் ஃபார்ம் மூலமாக அனைத்துவிதமான விமர்சனங்களுக்கும் முற்றுப்புள்ளி வைத்து, ஒவ்வொரு தேர்விலும் தன்னை ஒரு சிறந்த வீரராக நிரூபித்து வருகிறார்.
இருப்பினும், ரோஹித் சர்மாவின் இந்த 2027 உலகக் கோப்பை கனவு அத்தனை எளிதாக நிறைவேறிவிடுமா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ , முதன்மை தேர்வாளர் அஜித் அகர்கர் மற்றும் தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் ஆகியோர் இந்திய அணியின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு சில முக்கிய திட்டங்களை வகுத்து வருகின்றனர். 2027 ஆம் ஆண்டு உலகக் கோப்பை நடக்கும் போது ரோஹித் சர்மாவுக்கு 40 வயதைத் தாண்டியிருக்கும் என்பதால், அதற்குள் இளம் வீரர்களைக் கொண்ட ஒரு வலுவான அணியை உருவாக்க தேர்வுக்குழு விரும்புகிறது.
தற்போது இந்திய அணியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் போன்ற அதிரடியான இளம் தொடக்க ஆட்டக்காரர்கள் தங்களது திறமையை நிரூபித்து, அணியில் தங்களுக்கான இடத்தை நிலையாக்கி வருகின்றனர். டி20 போட்டிகளில் இருந்து ரோஹித் சர்மா ஓய்வு பெற்றுவிட்ட நிலையில், ஒருநாள் போட்டிகளிலும் இளம் வீரர்களுக்கு அதிக வாய்ப்பளிக்க பயிற்சியாளர் கம்பீர் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. மேலும் ரோகித் சர்மா ஒரு நாள் தொடரிலிருந்து ஓரம் கட்டப்படுவதாக பல்வேறு வதந்திகள் வந்த நிலையில் தற்போது பிசிசிஐ அந்த தகவல்களில் எந்த உண்மையையும் இல்லை எனவும் ஒரு நாள் தொடரில் ரோஹித் சர்மா தொடர்ந்து விளையாடுவார் என்று வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
