திரில்லர் திரைப்படங்களைப் பார்த்து, ஓடும் ரயிலில் கணவனைக் கொள்ளையர்கள் சுட்டுக் கொன்றதாக நாடகமாடிய அரசு பெண் அதிகாரி மற்றும் அவரது காதலனின் கொடூரச் சதியை, அவர்கள் செய்த 3 முக்கிய தவறுகளின் அடிப்படையில் பீகார் மாநில ரயில்வே போலீசார் அதிரடியாக அம்பலப்படுத்தியுள்ளனர்.

ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த தேவ்குமார் குஞ்சன் என்பவர் மின்சாரத் துறையில் தொழில்நுட்ப வல்லுநராகப் பணியாற்றி வந்தார். இவரது மனைவி சமிதா குமாரி, மோட்டார் வாகன ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார். திருமணத்திற்கு முன்பே அஜித்குமார் என்பவருடன் காதலில் இருந்த சமிதா, திருமணத்திற்குப் பிறகும் தனது கள்ள உறவைத் தொடர்ந்துள்ளார். தங்களது கள்ளக்காதலுக்குத் தடையாக இருந்த கணவன் தேவ்குமாரைத் தீர்த்துக்கட்ட சமிதாவும், அவரது காதலன் அஜித்தும் சஸ்பென்ஸ்-த்ரில்லர் திரைப்படங்களைப் பார்த்து ஒரு மாஸ்டர் பிளான் போட்டுள்ளனர்.

இதற்காக வாடகைக் கொலையாளி ராஜு என்பவரை 4 லட்சம் ரூபாய்க்குப் பேசி, 1.60 லட்சம் ரூபாய் முன்பணமும் கொடுத்துள்ளனர். திட்டமிட்டபடி கடந்த ஜூன் 11 அன்று, கூட்ட நெரிசல் மிகுந்த எக்ஸ்பிரஸ் ரயிலில் தேவ்குமாரைப் பயணிக்க வைத்து, மான்சி ரயில் நிலையம் அருகே கொலையாளி மூலம் சுட்டுக் கொன்றனர். சம்பவத்திற்குப் பின், ரயிலில் புகுந்த கொள்ளையர்கள் தனது கணவரைச் சுட்டுக் கொன்றுவிட்டதாகச் சமிதா போலீசாரிடம் கண்ணீருடன் நாடகமாடினார்.

இருப்பினும், கொலையாளிகள் செய்த மூன்று முக்கிய தவறுகள் இந்தச் சதியை வெளிச்சத்திற்கு கொண்டு வந்தன. முதலாவதாக, ரயிலில் கொள்ளை நடந்ததாகச் சமிதா கூறிய நிலையில், வேறு எந்தப் பயணியிடமிருந்தும் கொள்ளை புகார் வரவில்லை. இரண்டாவதாக, கொள்ளையடிக்க வந்தவர்கள் தேவ்குமாரின் எந்தப் பொருட்களையும் திருடாமல் அப்படியே விட்டுச் சென்றனர்.

இதனால் சந்தேகமடைந்த போலீசார் தேவ்குமாரின் கைபேசியைச் சோதித்தபோது, அதில் ஒரு எண் ‘கமீனா’ என்ற பெயரில் சேமிக்கப்பட்டிருந்தது. அது சமிதாவின் காதலன் அஜித்துடையது என்பதும், கொலையுண்ட அன்று அதிகாலை 3 மணி முதல் வாட்ஸ்அப் மூலம் சமிதா கொலையாளிக்குத் கணவனின் லைவ் லொகேஷனை அனுப்பியதும் அம்பலமானது. இதனையடுத்து சமிதா, அவரது காதலன் அஜித் மற்றும் வாடகைக் கொலையாளி ராஜு ஆகிய மூவரையும் போலீசார் அதிரடியாகக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

சமீபத்தில் புனேயில் கணவனைப் பள்ளத்தாக்கில் தள்ளிய சியா வழக்கு மற்றும் மேகாலயாவில் தேனிலவின் போது கணவனைக் கொன்ற சோனம் வழக்கின் வரிசையில், பீகாரில் அரங்கேறியுள்ள இந்தச் சமிதா வழக்கும் தற்சமயம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.