இந்தியாவில் நாம் சாதாரணமாக காய்கறி வாங்கும்போது, கடைக்காரரிடம் ‘கொஞ்சம் கொத்தமல்லியும் பச்சை மிளகாயும் போடுங்க’ என்று இலவசமாகக் கேட்பது வழக்கம். ஆனால், அதே பச்சை மிளகாய் அமெரிக்காவில் தங்கம், வெள்ளி போன்ற விலையுயர்ந்த பொருட்களுக்கு இணையாக விற்கப்படும் அதிர்ச்சி வீடியோ ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அமெரிக்காவிற்குச் சென்ற இந்தியப் பெண் ஒருவர், அங்குள்ள சூப்பர் மார்க்கெட்டில் பச்சை மிளகாயின் விலையைப் பார்த்து அதிர்ச்சியடைந்து வெளியிட்ட வீடியோதான் தற்போது இணையவாசிகளைப் பெரிதும் கவர்ந்துள்ளது.

அந்த வீடியோவில், அமெரிக்க சூப்பர் மார்க்கெட் ஒன்றில் காய்கறி வாங்கச் சென்ற அந்தப் பெண், அங்கு அடைத்து வைக்கப்பட்டிருந்த பச்சை மிளகாய் பாக்கெட்டின் விலையைப் பார்த்து வாயடைத்துப் போயுள்ளார். வெறும் 15 முதல் 20 மிளகாய்கள் மட்டுமே கொண்ட ஒரு சிறிய பெட்டியின் விலை இந்திய மதிப்பில் சுமார் 400 ரூபாயாக உள்ளது. அதாவது, வெறும் 114 கிராம் எடை கொண்ட இந்த மிளகாயின் விலையை ஒரு கிலோ கணக்கில் கணக்கிட்டுப் பார்த்தால், அது தோராயமாக 700 ரூபாய்க்கு மேல் வருகிறது. இதனைத் தனது மொபைல் கேமராவில் பதிவு செய்த அந்தப் பெண், அமெரிக்காவில் காய்கறி வாங்குவது தங்கம் வாங்குவதற்குச் சமம் என்று  தெரிவித்துள்ளார்.

 

 

View this post on Instagram

 

A post shared by Neha Jain| USA life (@neha_in_usa)

இந்த வீடியோ வெளியான சில மணி நேரங்களிலேயே பல்லாயிரக்கணக்கான மக்களைச் சென்றடைந்து சமூக வலைத்தளங்களில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. வீடியோவைப் பார்த்த நெட்டிசன் ஒருவர் வேடிக்கையாக, “இனி நாம் அமெரிக்காவிற்குச் சென்று பச்சை மிளகாய் விவசாயம் தான் செய்ய வேண்டும் போலிருக்கிறது” என்று கமெண்ட் செய்துள்ளார். மற்றொருவர், “அமெரிக்காவில் வருமானம் அதிகமாக இருப்பதால், அங்கு பொருட்களின் விலையும் அதற்கு ஏற்றவாறே இருக்கும்” என்று நிதர்சனத்தை விளக்கியுள்ளார். இன்னும் சிலரோ, “நம்ம ஊரில் இதையெல்லாம் இலவசமாகக் கொடுப்பார்கள்” என்று கூறி இந்தியாவை பெருமையோடு நினைவுகூர்ந்துள்ளனர்.

இணையத்தில் வைரலாகும் இந்த விவாதம், வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் எதிர்கொள்ளும் அன்றாட வாழ்க்கைச் செலவுகளை வெளிச்சமிட்டுக் காட்டுகிறது. இந்தியாவில் பணவீக்கம் இருந்தாலும், மிளகாய், கொத்தமல்லி போன்ற அன்றாடப் பொருட்களை நாம் மிக மலிவாகப் பெற முடிகிறது என்பதை இந்த வீடியோ மீண்டும் நிரூபித்துள்ளது. “என் பாரதம் உன்னதமானது” என்று பலரும் தங்களது தேசப்பற்றை கமெண்ட் செக்ஷனில் வெளிப்படுத்தி வரும் வேளையில், இந்த மிளகாய் விலை வீடியோ சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து பேசுபொருளாகவே நீடித்து வருகிறது.