சீனாவின் குவாங்டாங் மாகாணத்தில் உள்ள ஜிய்யாங் பகுதியில், பார்ப்பவர்கள் நெஞ்சை பதறவைக்கும் ஒரு கொடூரமான விலங்கு வதை சம்பவம் நடந்துள்ளது. அந்தப் பகுதியில் வாழும் நான்கு சிறுவர்கள் சேர்ந்து, மூன்று குட்டி நாய்களையும் அதன் தாய் நாயையும் மிகக் கொடூரமாக சித்திரவதை செய்து கொன்றுள்ளனர். தங்களது இந்த மனிதாபிமானமற்ற கொடூரச் செயலை அந்தச் சிறுவர்கள் வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களிலும் பகிர்ந்துள்ளனர். இந்த வீடியோ இணையத்தில் பரவியதைத் தொடர்ந்து, சீன மக்கள் மட்டுமன்றி ஒட்டுமொத்த உலகமே அதிர்ச்சியிலும் ஆத்திரத்திலும் உறைந்துள்ளது.
அந்தக் கிராமத்தில் வசித்து வந்த ‘வாங் வாங்’ என்ற தாய் நாய், சமீபத்தில் தான் மூன்று குட்டிகளைப் பெற்றெடுத்திருந்தது. கிராம மக்கள் பலரும் அதற்கு உணவளித்து அன்பாகப் பார்த்து வந்துள்ளனர். இந்நிலையில், 14 வயதிற்கு உட்பட்ட நான்கு சிறுவர்கள், அந்தத் தாய் நாயையும் அதன் பிஞ்சு குட்டிகளையும் குறிவைத்துள்ளனர். மூன்று குட்டிகளையும் அடித்துக் கொன்ற அந்தச் சிறுவர்கள், தாய் நாயின் மீது பெட்ரோலை ஊற்றி உயிருடன் எரித்துள்ளனர். நாய் தீயில் கருகி துடித்தபோது, அதை வீடியோ எடுத்த ஒரு சிறுவன், “அவள் எரியும் வாசனை என் பசியைத் தூண்டுகிறது” என்று கொடூரமாக சிரித்துக் கொண்டே பேசிய வார்த்தைகள் தான் தற்போது பலரையும் கொதித்தெழச் செய்துள்ளது.
இந்தச் சம்பவத்தின் மிகக் கொடுமையான பகுதி என்னவென்றால், தனது குட்டிகள் ஆபத்தில் இருப்பதை உணர்ந்த தாய் நாய், தன் உடல் தீப்பற்றி எரிந்தபோதும் தன் குட்டிகளை விட்டு ஓடாமல் அவற்றைக் காப்பாற்ற மீண்டும் மீண்டும் அவற்றிடமே ஓடிவந்துள்ளது. தாய் நாயின் இந்த அளவற்ற பாசத்தை அந்தச் சிறுவர்கள் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தி, அதைத் தப்பவிடாமல் முழுமையாக எரித்துக் கொன்றுள்ளனர். இந்தச் சம்பவம் வெளியில் தெரிந்ததும் கிராம மக்கள் கடும் கோபமடைந்தனர். ஆனால், சீன சட்டப்படி 14 வயதிற்கு உட்பட்ட சிறுவர்கள் மீது கடுமையான குற்றவியல் நடவடிக்கை எடுக்க முடியாது என்பதால், அவர்கள் சீர்திருத்தப் பள்ளிக்கு மட்டுமே அனுப்பப்பட்டுள்ளனர். அவர்களின் பெற்றோர்கள் இனி அவர்களைக் கவனமாகப் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று மட்டுமே அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்தச் சிறுவர்கள் ஏழ்மையான குடும்பப் பின்னணியைக் கொண்டவர்கள் என்றும், மனநலப் பாதிப்பு உள்ளவர்கள் என்றும் சிலர் இவர்களின் செயலுக்குக் காரணங்களைக் கூறினாலும், மக்கள் அதை ஏற்க மறுத்து வருகின்றனர். இவ்வளவு கொடூரமான செயலில் ஈடுபட்டவர்களுக்குக் கொடுக்கப்பட்ட இந்தத் தண்டனை மிகவும் குறைவு என்று சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். சீனாவின் இந்த மென்மையான அணுகுமுறைக்கு உலக அளவில் கண்டனங்கள் எழுந்துள்ளதோடு, விலங்கு நலனுக்கான கடுமையான சட்டங்களைச் சீனா உடனடியாகக் கொண்டுவர வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது.
