இந்தியா – பாகிஸ்தான்… இந்த இரு நாடுகளுக்கு இடையேயான எல்லைக் கோடு என்பது வெறும் நிலப்பரப்பைப் பிரிப்பது மட்டுமல்ல; அது உணர்ச்சிகளின், அரசியலின், வரலாற்றுப் பகையின் தணல் ஆடுகளம். எப்போதுமே பரபரப்புக்கு பஞ்சமில்லாத இந்த இருதரப்பு உறவில், இப்போது ஒரு புதிய புயல் வீசத் தொடங்கியிருக்கிறது. அதுவும் சாதாரணமான ஒரு புயல் அல்ல, ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகையும், நாட்டின் பாதுகாப்பு வட்டாரங்களையும் உலுக்கிப் பார்க்கும் ஒரு சம்பவம்.

அதாவது முன்னாள் மத்திய உள்துறை அமைச்சகச் செயலாளர் ஆர்.வி.எஸ். மணி, ஏ.என்.ஐ (ANI) செய்தி நிறுவனத்தின் பாட்காஸ்டில் வெளியிட்டிருக்கும் ஒரு குற்றச்சாட்டு, தற்போது இணையத்தில் காட்டுத்தீயாய் பரவி, ரசிகர்களிடையேயும் அரசியல் வட்டாரத்திலும் தீராத விவாதப் பொருளாக மாறியுள்ளது. பாகிஸ்தான் கிரிக்கெட் வரலாற்றின் ஆகச்சிறந்த வேகப்பந்து வீச்சாளர்களாகக் கொண்டாடப்பட்டவர்கள் சோயப் அக்தர் மற்றும் முகமது ஆசிப். இவர்களது பந்துவீச்சு இந்தியாவின் விக்கெட்டுகளை மட்டுமல்ல, ரசிகர்களின் இதயங்களையும் மிரள வைத்தவை. ஆனால், இவர்களின் அசாத்திய வேகத்திற்கு பின்னால் ஒரு கறுப்புப் பக்கம் இருந்ததா? என்ற அதிர வைக்கும் கேள்வியை எழுப்பியுள்ளார் ஆர்.வி.எஸ். மணி.

“பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களான ஷோயப் அக்தரும், முகமது ஆசிப்பும் இந்தியாவிற்குள் போதைப்பொருட்களைக் கடத்திக் கொண்டு வந்தார்கள். இது ஏதோ யூகத்தின் அடிப்படையில் சொல்லப்படும் குற்றச்சாட்டு அல்ல. இந்த வழக்கு குறித்த உத்தியோகபூர்வ அறிக்கையில், தாங்கள் போதைப்பொருள் கொண்டு வந்ததை பாகிஸ்தான் உயர் ஆணையரிடமே இரு வீரர்களும் ஒப்புக்கொண்டது தெளிவாகப் பதிவாகியுள்ளது. இதன் காரணமாகவே அவர்கள் அவசர அவசரமாக இந்தியாவிலிருந்து பாகிஸ்தானுக்குத் திருப்பி அனுப்பப்பட்டனர்,” என்று கூறியுள்ளார்.

இந்த நேர்காணலின் போது மூத்த பத்திரிகையாளர் ஸ்மிதா பிரகாஷ், “அது தங்களின் தனிப்பட்ட பயன்பாட்டிற்காக கொண்டு வரப்பட்டதாக சோயப் மற்றும் ஆசிஃப் தரப்பில் கூறப்பட்டதே?” என்று குறுக்கே கேள்வி எழுப்பிய போது, ஆர்.வி.எஸ். மணியின் பதில் இன்னும் அதிரடியாக இருந்தது. “எந்தவொரு பாகிஸ்தான் தூதுக்குழுவோ, கிரிக்கெட் அணியோ அல்லது வேறு எந்தக் குழுவோ இந்தியாவிற்கு வந்தாலும், அவர்களால் போதைப்பொருட்கள் கடத்தி வரப்பட்டன. அது தனிப்பட்ட பயன்பாட்டிற்கானது மட்டுமே அல்ல, அதன் பின்னணியில் ஒரு பெரிய நெட்வொர்க் இருந்தது.

வரலாற்றின் பக்கங்களை சற்று திருப்பிப் பார்த்தால், 2006 அக்டோபரில், இந்தியாவில் நடந்த ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடங்குவதற்கு சில நாட்களுக்கு முன்பு, சோயப் அக்தரும் முகமது ஆசிப்பும் திடீரென இந்தியாவிலிருந்து பாகிஸ்தானுக்குத் திருப்பி அழைக்கப்பட்டனர் என்பது உண்மைதான். கிரிக்கெட் உலகின் அதிகாரப்பூர்வ தளமான ‘இஎஸ்பிஎன் கிரிக்கின்ஃபோ அறிக்கையின்படி, தடைசெய்யப்பட்ட அனபாலிக் ஸ்டீராய்டான ‘நாண்ட்ரோலோன்’ இவர்களின் உடலில் இருந்தது ஊக்கமருந்து சோதனையில் உறுதியானது.

இதன் காரணமாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இவர்களுக்குத் தடையும் விதித்தது. ஆனால், வியப்பளிக்கும் விதமாக அதே ஆண்டு டிசம்பர் மாதத்தில் அந்தத் தடைகள் நீக்கப்பட்டு, அவர்கள் மீதான குற்றச்சாட்டுகளிலிருந்து விடுவிக்கப்பட்டனர். விளையாட்டு உலகம் இதை ஊக்கமருந்து விவகாரமாகப் பார்த்தபோது, இந்திய உளவுத்துறையும் உள்துறை அமைச்சகமும் இதன் பின்னணியில் இருந்த போதைப்பொருள் கடத்தல் நிழலை உற்று நோக்கியுள்ளது என்பதை மணியின் வார்த்தைகள் வெளிச்சமிட்டுக் காட்டுகின்றன.

ஆர்.வி.எஸ். மணியின் இந்த அதிரடி அம்புகள் இத்தோடு நின்றுவிடவில்லை. இந்த விவகாரம் நடந்து சரியாக ஆறு மாதங்களுக்குப் பிறகு, உலக கிரிக்கெட்டையே உலுக்கிய பாகிஸ்தான் அணியின் அப்போதைய பயிற்சியாளர் பாப் உல்மரின் மர்ம மரணத்தையும் இதோடு சுட்டிக்காட்டுகிறார்.

2007 உலகக் கோப்பை தொடரின் போது ஜமைக்காவில் உள்ள ஒரு ஹோட்டல் அறையில் பாப் உல்மர் சந்தேகத்திற்கிடமான முறையில் இறந்து கிடந்தார். “சோயப் அக்தர் மற்றும் முகமது ஆசிப் சம்பவங்கள் நடந்த சில மாதங்களில், பாகிஸ்தானியர்களின் இந்தத் திட்டமிட்ட போதைப்பொருள் கடத்தலுக்கு எதிராக பயிற்சியாளர் பாப் உல்மர் கடுமையான போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார். அதன் பிறகுதான் அவர் மர்மமான சூழ்நிலையில் உயிரிழந்தார். பாப் உல்மரின் மரணம் சர்வதேச அளவில் பல அமைப்புகளால் விசாரிக்கப்பட்டு, இந்த குற்றச்சாட்டுகள் அதிகாரப்பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை என்றாலும், ஒரு நாட்டின் முன்னாள் உயர் அதிகாரி இதை மீண்டும் கிளறியிருப்பது கிரிக்கெட் ரசிகர்களின் நெஞ்சில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நேர்காணலின் மிக பயங்கரமான பகுதி, இந்தியாவின் பாதுகாப்பு தொடர்பானது. பாகிஸ்தானிலிருந்து இந்தியாவிற்கு போதைப்பொருள் கடத்துவது என்பது ஏதோ ஒரு சில நபர்களின் சுயநல லாபத்திற்காக நடந்தது அல்ல, அது பாகிஸ்தான் அரசாங்கத்தின் ஒரு திட்டமிட்ட ‘கொள்கை’ என்கிறார் மணி.

“அக்கால உளவுத்துறை அறிக்கைகளின்படி, இந்தியா மீது நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்களில் 30 சதவீத தாக்குதல்களுக்கு இந்த போதைப்பொருள் கடத்தல் மூலமே நிதி திரட்டப்பட்டது. ஆப்கானிஸ்தானின் ஜலாலாபாத் பகுதியில் போதைப்பொருள் அறுவடை நன்றாக இருந்தால், அடுத்த சில மாதங்களில் இந்தியாவில் பயங்கரவாதத் தாக்குதல்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று எங்கள் துறை கணிப்பது வழக்கம்,” என்று நாட்டின் பாதுகாப்பு அறைகளில் விவாதிக்கப்பட்ட அதிர்ச்சி ரகசியங்களை உடைக்கிறார் அவர்.

விளையாட்டு என்பது நாடுகளை இணைக்கும் பாலம் என்று நாம் நம்பிக் கொண்டிருக்க, அதன் பின்னணியில் இத்தனை கறுப்புப் பக்கங்களும், உளவுத்துறை யுத்தங்களும், நிழல் உலக வர்த்தகங்களும் ஒளிந்திருக்கின்றனவா என்ற கேள்வி வாசகர்களின் மனதில் எழாமல் இல்லை. ஆர்.வி.எஸ். மணியின் இந்த குற்றச்சாட்டுகள் அதிகாரப்பூர்வமாக இன்னும் நிரூபிக்கப்படாவிட்டாலும், இந்தியா – பாகிஸ்தான் என்ற இரு நாடுகளுக்கு இடையேயான கிரிக்கெட் என்பது வெறும் விளையாட்டு மட்டுமல்ல, அது ஒரு கண்ணுக்குத் தெரியாத போர்க்களம் என்பதை மீண்டும் ஒருமுறை உலகிற்கு உணர்த்தியுள்ளது.