திருநெல்வேலியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், கர்நாடக அரசு மேகதாது அணை கட்டும் முயற்சியைத் தடுக்க தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
மேலும், மத்தியில் பாஜக ஆட்சியில் இருந்தவரை காவேரித் தண்ணீர் திறப்பதில் எந்தப் பிரச்சினையும் இருந்ததில்லை என்று சுட்டிக்காட்டிய அவர், உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி கோயில் நிலங்களை யாருக்கும் தானமாகவோ, இலவசமாகவோ கொடுக்கக் கூடாது என்றும், விவசாயத்திற்கு குத்தகை அடிப்படையில் வழங்கி, அங்குக் குடியிருப்பவர்களிடம் குறைந்தபட்ச வாடகை மட்டுமே பெற்று அவர்களைக் காலி செய்யாமல் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
தொடர்ந்து தமிழக அரசின் செயல்பாடுகளை விமர்சித்த அவர், மாநிலத்தின் பல பகுதிகளில் மின்வெட்டு தொடர்வதாகவும், மின்சாரத்துறை அமைச்சர் போதிய ஈடுபாடுடன் செயல்படவில்லை என்றும் குற்றம் சாட்டினார். இறுதியாக தமிழக வெற்றிக் கழகக் கூட்டணி குறித்துப் பேசிய அவர், அக்கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு இடையே நிலவும் முரண்பாடுகள் காரணமாகவே, தலைவர்கள் தங்களுக்குள் வெவ்வேறு முரண்பாடான கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர் என்று அம்பலப்படுத்திப் பேசினார்.
