பாகிஸ்தானின் மிக செல்வாக்கு மிக்க அரசியல் மற்றும் மதத் தலைவர்களில் ஒருவரான ஜேயுஐ-எஃப் கட்சியின் தலைவர் மவுலானா ஃபஸ்லூர் ரஹ்மான், அந்நாட்டு ராணுவத்தின் மீதும் அதன் தளபதி ஜெனரல் ஆசிம் முனீர் மீதும் மிகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். பஞ்சாப் மாகாணத்தின் கசூர் பகுதியில் நடைபெற்ற பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், ராணுவம் தனது அரசியல் சாசன எல்லையை மீறி, நாட்டின் அரசியலில் தொடர்ந்து தலையிட்டு வருவதாகக் குற்றம் சாட்டினார். மேலும், ராணுவ தளபதிக்கு நேரடி சவால் விடுத்த அவர், “உங்களுக்கு அரசியல் செய்ய வேண்டும் என்ற ஆசை இருந்தால், முதலில் ராணுவ சீருடையைக் கழற்றிவிட்டு நேடியாகத் தேர்தலில் வந்து போட்டியிடுங்கள்; அப்போதுதான் சீருடை அணிந்தவர்களுக்கு மக்கள் என்ன மாதிரியான வாக்கு அளிப்பார்கள் என்பது உங்களுக்கே புரியும் என்றார்.

பாகிஸ்தானின் தற்போதைய பாதுகாப்பு நிலைமை மிக மோசமாக உள்ளதைச் சுட்டிக்காட்டிய அவர், பலூசிஸ்தான் மாகாணம் ஏற்கனவே பாகிஸ்தான் அரசின் கட்டுப்பாட்டை மீறிச் சென்றுவிட்டதாகக் கவலை தெரிவித்தார். அங்கு அரசு என்ற ஒன்றே இல்லை என்றும், கிளர்ச்சிகள் வெடித்து அந்தப் பிராந்தியம் முழுவதும் தனித்துச் செயல்படுவதாகவும் அவர் கூறினார். இதுமட்டுமன்றி, தற்போது கைபர் பக்துன்க்வா போன்ற பஷ்தூன் மக்கள் வாழும் பகுதிகளும் ரத்த வெள்ளத்தில் மூழ்கி வருவதாகவும், கடந்த இரண்டு மூன்று நாட்களில் மட்டும் 50-க்கும் மேற்பட்ட சடலங்களை மீட்டுள்ளதாகவும் அவர் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளார்.

தீவிரவாதத்திற்கு எதிராகப் பொதுமக்கள் ராணுவத்துடன் கைகோர்க்க வேண்டும் என்ற ராணுவ தளபதியின் சமீபத்திய கருத்தை மறுத்த ஃபஸ்லூர் ரஹ்மான், சாதாரண மக்களை ஆயுதம் ஏந்திய குழுக்களுக்கு எதிராகத் திருப்புவது, நாட்டில் தலைமுறை தலைமுறையாகப் பழிவாங்கும் வன்முறை கலாச்சாரத்தையே உருவாக்கும் என்றும், நாட்டை நிரந்தரக் கொலைக் களமாக மாற்ற வேண்டாம் என்றும் ராணுவத்தை மிகக் கடுமையாக எச்சரித்துள்ளார்.