தமிழகம் முழுவதும் உள்ள அரசு இ-சேவை மற்றும் ஆதார் சேர்க்கை மையங்கள் அனைத்தும் வரும் ஜூலை 20-ஆம் தேதி ஒருநாள் முழுவதும் செயல்படாது என்று தமிழ்நாடு தரவு உள்ளீட்டாளர்கள் சங்கம் அதிரடியாக அறிவித்துள்ளது. இ-சேவை மையங்களில் பணிபுரியும் ஊழியர்களின் சம்பளத்தில் தொடர்ந்து முறையற்ற வகையில் பிடித்தம் செய்யப்பட்டு வருவதையும், அவர்களுக்குக் கிடைக்க வேண்டிய பிஎஃப் (PF) மற்றும் இஎஸ்ஐ (ESI) போன்ற அத்தியாவசியப் பாதுகாப்புப் பலன்கள் வழங்கப்படாததையும் கண்டித்து இந்த அதிரடி முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
தங்களது நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் ஜூலை 20-ஆம் தேதி சென்னையில் ஊழியர்கள் சங்கம் சார்பில் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற உள்ளது. இதில் மாநிலம் முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான ஊழியர்கள் கலந்துகொள்ள உள்ளதால், அன்றைய தினம் இ-சேவை மற்றும் ஆதார் மையங்கள் முற்றிலும் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த அதிரடிப் போராட்ட அறிவிப்பால் அரசு வட்டாரத்திலும், பொதுமக்களிடையேயும் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.
