“ஒரு பெண் ‘வேண்டாம்’னு சொன்னா அதோட அந்தப் பேச்சு முடிஞ்சிருக்கணும், அதை மீறி ஒரு அந்நியன் வீட்டுக்குள்ள நுழைஞ்சு பாத்ரூம் போயிட்டு வந்து இப்படி ஒரு அசிங்கமான காரியத்தை என் கண்ணு முன்னாடி பண்ணுவான்னு நான் கனவுல கூட நினைக்கல, என் சொந்த வீட்டுலயே எனக்கு பாதுகாப்பு இல்லாத மாதிரி ஆயிடுச்சு!”

என்று பெங்களூரு மாரத்தஹள்ளியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் பார்சல் டெலிவரி செய்ய வந்த ஏஜென்ட் தன் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட கொடூர சம்பவத்தை சமூக வலைத்தளத்தில் கண்ணீருடன் பதிவிட்டுள்ளார்;

ஜூலை 11 சனிக்கிழமை இரவு நடந்த இந்த அதிர்ச்சி சம்பவத்தில், ஆன்லைன் பார்சல் கொடுப்பதற்காக வந்த டெலிவரி ஊழியர் திடீரென அவசரமாகக் கழிவறையைப் பயன்படுத்த வேண்டும் என்று கேட்க, அந்தப் பெண் பயந்துபோய் மறுத்துள்ளார்.

ஆனால், அந்தப் பெண்ணின் பேச்சை மதிக்காமல் பலவந்தமாகச் செருப்பைக் கழற்றிவிட்டு வீட்டிற்குள் நுழைந்த அந்த ஏஜென்ட், பாத்ரூமில் இருந்து வெளியே வந்ததும் யாரும் எதிர்பாராத விதமாகத் தனது அந்தரங்க உறுப்பைக் காட்டி அந்தப் பெண்ணுக்கு உச்சக்கட்ட பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

“>

இதனால் நிலைகுலைந்து போன அந்தப் பெண், ஏதேனும் அசம்பாவிதம் நடந்துவிடுமோ என்ற பயத்தில் உடனடியாகத் தனது மொபைல் கேமராவை ஆன் செய்து, வீட்டின் பிரதான கதவைத் திறந்து வைத்துக்கொண்டு உதவிக்காக வெளியே ஓடத் தயாராக நின்று தப்பியுள்ளார்;

ஒவ்வொரு நாளும் பெண்களுக்கு எதிராக நடக்கும் கொடூரங்களை நினைத்து தான் மரண பயத்தை அநுபவித்ததாக அவர் அந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ளார். இந்த விவகாரம் பூதாகரமானதைத் தொடர்ந்து, பெங்களூரு மாரத்தஹள்ளி போலீசார் அந்தப் பெண்ணைத் தொடர்பு கொண்டு கொடுத்த புகாரின் அடிப்படையில் தற்போது முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்து, தலைமறைவாக உள்ள அந்த டெலிவரி ஏஜென்டைப் பிடிக்கத் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்;

இந்தச் சம்பவம் ஐடி சிட்டியான பெங்களூருவில் தனியாக வசிக்கும் பெண் ஊழியர்கள் மத்தியில் பெரும் பீதியையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.