இந்திய கிரிக்கெட் அணியின் பிளேயிங் லெவனில் (XI) இடம் பிடிப்பதே மிகப்பெரிய சவாலாக இருக்கும் நிலையில், அணியில் இருந்து நீக்கப்பட்ட பிறகு மீண்டும் கம்பேக் கொடுப்பது அதைவிடக் கடினமானது என்பதை 15 வயதே ஆன இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி தற்போது உணர்ந்துள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான 5வது டி20 போட்டியில், இஷான் கிஷன் நீக்கப்பட்டு சஞ்சு சாம்சன் மற்றும் சூர்யவன்ஷி இருவருக்குமே வாய்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், யாரும் எதிர்பார்க்காத விதமாக சூர்யவன்ஷி அணியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார்.
இந்த முடிவால் நிலை குலைந்து போன சூர்யவன்ஷி, மைதானத்தில் மிகுந்த ஏமாற்றத்துடனும் சோகத்துடனும் உலா வந்த காட்சிகள் ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சூர்யவன்ஷியின் இந்த நிலைமை குறித்துப் பேசிய முன்னாள் வீரர் அம்பதி ராயுடு, போட்டிக்கு முந்தைய நாள் இரவே சூர்யவன்ஷிக்கு இந்த நீக்கம் குறித்து மேனேஜ்மென்ட் முறையாகத் தகவல் தெரிவிக்கவில்லை என்பது அவரது முக பாவணையிலேயே தெரிகிறது என்று குற்றம் சாட்டியுள்ளார். மேலும், இந்திய கிரிக்கெட் வரலாற்றின் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் இந்த முடிவை முற்றிலும் எதிர்த்துள்ளார்.
சூர்யவன்ஷி முந்தைய போட்டிகளில் அவுட் ஆகியிருந்தாலும், அவரிடம் இருக்கும் அசாத்திய திறமைக்கு இந்த போட்டியில் இன்னொரு வாய்ப்பு வழங்கி சோதித்திருக்க வேண்டும் என்றும், 15 வயது சிறுவனை இப்படி திடீரென நீக்கியது மிகவும் கடினமானது என்றும் அவர் வருத்தத்துடன் தெரிவித்துள்ளார். இருப்பினும், வரும் ஜூலை 23 முதல் தொடங்கவுள்ள ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான இந்திய அணியில் சூர்யவன்ஷி இடம் பிடித்துள்ளதால், அவர் விரைவில் மாஸ் கம்பேக் கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
