காரை வாங்குவதற்காக முழுப் பணத்தையும் செலுத்திய பிறகும், 12 ஆண்டுகள் ஆகியும் கார் டெலிவரி செய்யப்படாத வழக்கில், பாதிக்கப்பட்ட நபருக்கு ரூ.10.81 லட்சம் நிவாரணம் வழங்க புதுச்சேரி மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
புதுச்சேரியைச் சேர்ந்த நபர் ஒருவர், கடந்த 2013-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் மகிந்திரா நிறுவனத்தின் ‘எக்ஸ்யூவி500 டபிள்யூ6’ ரக கார் ஒன்றை வாங்குவதற்காக முன்பணமாக ரூ.40,000 செலுத்தியுள்ளார். மீதமுள்ள தொகையை வங்கிக் கடன் மூலம் பெற்று மொத்தம் ரூ.8.96 லட்சத்தை டீலரின் கணக்கிற்கு அனுப்பியுள்ளார்.
மேலும் ஒரு வாரத்தில் கார் டெலிவரி செய்யப்படும் என்று டீலர் உறுதியளித்த நிலையில், கார் குடோனில் இல்லை என்றும், நிறுவனத்தின் தரப்பில் தாமதம் ஏற்படுகிறது என்றும் கூறி சுமார் 12 ஆண்டுகளாக காரை வழங்காமல் இழுத்தடித்துள்ளனர். இதனால் கார் வாங்க பணம் செலுத்திய நபர் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளானதுடன், வங்கி இஎம்ஐ செலுத்த முடியாததால் மாற்றுத் தனிநபர் கடன் கூட பெற முடியாமல் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளார்.
இந்த வழக்கை விசாரித்த எஸ். சுந்தரவடிவேலு மற்றும் எஸ். உமாசங்கரி ஆகியோர் அடங்கிய புதுச்சேரி மாநில நுகர்வோர் குறைதீர் ஆணைய அமர்வு, வாடிக்கையாளருக்குச் சேவை குறைபாடு ஏற்படுத்தியதற்காக மகிந்திரா நிறுவனம் மற்றும் சம்பந்தப்பட்ட கார் டீலர் ஆகிய இருவரையும் பொறுப்பாக்கியுள்ளது.
இந்நிலையில் 12 ஆண்டுகள் கடந்தும் காரை ஒப்படைக்காதது அந்த நபருக்குப் பெரும் மன வேதனையையும், நேர மற்றும் பண விரயத்தையும் ஏற்படுத்தியுள்ளதாகக் குறிப்பிட்ட ஆணையம், இதற்கான அசல் தொகையான ரூ.8.71 லட்சத்தை புகார் அளிக்கப்பட்ட தேதியிலிருந்து 12 சதவீத வட்டியுடன் திருப்பி அளிக்குமாறு மகிந்திரா நிறுவனத்திற்கு உத்தரவிட்டது.
மேலும், சேவை குறைபாடு மற்றும் மன உளைச்சலுக்காக டீலர் தரப்பு ரூ.1.5 லட்சமும், மகிந்திரா நிறுவனம் ரூ.50,000-மும் இழப்பீடாக வழங்க வேண்டும் என்றும், நீதிமன்ற வழக்குச் செலவுகளுக்காக டீலர் தரப்பு ரூ.10,000 செலுத்த வேண்டும் என்றும் தீர்ப்பளித்து, பாதிக்கப்பட்ட நபருக்கு மொத்தம் ரூ.10.81 லட்சம் அளவிலான பெரிய நிவாரணத்தை உறுதி செய்துள்ளது.
